பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27



“இலட்சுமணா! இங்கே வா! இராமன் செல்கிற அந்த வனம் உனக்கு ஆகாதது அன்று. உனக்கும் அதுவேயாகும். இராமன் செல்கிற அந்த வனமே உனது அயோத்தி. “இராமனே நம் தசரத மன்னன். சீதையே நம் தாய்” என்று கருதிய வண்ணம் செல்வாய். புறப்படு. இனி இங்கு நிற்பதும் தவறு” என்றாள் சுமித்திரை தன் மைந்தன் இலக்குவனை நோக்கி.

உனக்கு ஆகாதது அன்று– இராமன் செல்கின்ற வனம் உனக்கு ஆகாதது அன்று (ஆனதே) அவ்வனம் இவ்வயோத்தி– இராமன் செல்கின்ற அவ்வனமே உனது அயோத்தியாகும்; மா காதல் இராமன்– உன்னிடம் மிக்க அன்புடைய இராமன்; நம் மன்னவன்– நம் தசரத மன்னன் ஆவான்; நம் பூங்குழல் சீதை– பூ அணிந்த கூந்தலை உடைய நம் சீதையே நம்தாய்; என்றே– என்று கருதிய வண்ணம்; ஏகாய் புறப்பட்டுச்செல்; இவ்வயின் நிற்றலும் ஏதம்– இனி இங்கே நிற்பதும் தவறு.

பின்னும் பகர்வாள்; ‘மகனே! இவன்
        பின் செல்’; தம்பி
என்னும்படி அன்று; அடியாரினில்
        ஏவல் செய்தி
மன்னும் நகர்க்கே இவன் வந்திடில்
        வா; அது இன்றேல்
முன்னம் முடி; என்றனள்; பால்
        முலை சோர நின்றாள்.

மேலும் அவள் சொல்கிறாள்; ‘மகனே! இவன் பின் செல். எப்படி? தம்பி எனும் முறை பற்றியன்று. இராமனுக்கு அடியார் என்ற முறையில் ஏவல் செய்.