பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

யும்; தந்த - உனக்கு அளித்த; மலரவன் முதலோர் வார்த்தை - பிரமதேவன் முதலியவர்களுடைய உறுதிமொழிகளும்; இராமன் வில் தொடை கோத்து விடுதலும் - இராமன் தனது வில்லிலே அம்பு தொடுத்து விடும் அளவிலே; எல்லாம் விலக்குண்டு - அந்தப் பாதுகாவல் யாவும் விலக்கப்பட்டு; இற்று உடைந்து இறுதல் மெய்யே - கட்டழிந்து உடைப்பட்டுப் போதல் திண்ணம்; விளக்கின் முன் இருள் உண்டாமோ? - விளக்கு வந்தால் இருள் இருக்குமா?


***

அப்பொழுது இராவணன் சொல்கிறான் : “வஞ்சனையால் உன்னைக் கவர்ந்து வந்தேன் என்று சொல்கிறாய். அவ்விதமின்றி உன் கணவனாகிய இராமனுடன் போர் செய்து அப் போரிலே அவனைக் கொன்றுவிடில் நின் உயிர் யாதாகும்? நீ உயிர் விடுவாய் அன்றோ? யான் கருதியது கைகூடாது அன்றோ? அப்படி உன்னை இழந்து விட்டால் எனது உயிரும் போய்விடும் அன்றோ? இவற்றையெல்லாம் நன்கு ஆராய்ந்த பின்னரே நான் வஞ்சனை செய்தேன். மானின் பின்னே சென்ற அந்த மானிடர் திரும்பி எங்கே வரப் போகிறார்? அதிலும் உன்னைக் கவர்ந்து சென்றவன் நான் என்று அறிந்தால் வரவே மாட்டார். அற்ப வலிமை பொருந்திய அந்த மானிடரை ஒரு கையால் பற்றி இங்கே கொண்டுவந்து உன் எதிரே நிறுத்தி எனக்கு ஏவல் செய்ய வைப்பேன். அந்த அயோத்திக்குச் சென்று பரதன் முதலியவர் தம் உயிர் குடிப்பேன். மிதிலைக்குச் சென்று உன் தந்தை முதலியோரை அழித்து இங்கு வந்து உன்னையும் கொல்வேன். நான் யார் என்பதை நீ இன்னும் அறிந்தாய் அல்லை:

இவ்வாறு சினந்து கடும் மொழிகள் கூறினான் இலங்கை வேந்தன்: “நயத்தாலோ பயத்தாலோ எப்படியோ அந்தச் சீதை என் விருப்பத்திற்கு இசையுமாறு செய்யுங்கள்” என்று அரக்கியருக்கு ஆணை பிறப்பித்தான்; அகன்றான்.