பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

153

தக்கது - இனி செய்வது யாது? என்று தீர்ந்தானோ - என்று முடிவு செய்து தேடுதல் ஒழித்தானோ; (அன்றி) தன் குலப்பொறைதான் - தான்பிறந்த சூரிய குலத்தின் பொறுமை; தன்பொறை - தானும் வகிக்கத் தக்கதொரு குணம் ஆகும்; (என்று) தணிந்தானோ - கோபம் தணிந்தானோ? என் கொல் எண்ணுவேன்? - என்ன என்று நினைப்பேன்? என்னும் - என்று கவலைப்படுவாள்; அங்கு இராப்பகல் இல்லாள் - அந்த இலங்கையிலே இரவும் பகலும் இன்னது என்று அறியாத சீதை. அதாவது கவலையால் இரவு தூங்குதல் ஒழித்தாள்; அதனால் இரவும் பகலும் ஒன்றே ஆயின.

***


பொறை இருந்து ஆற்றி
        என் உயிரும் போற்றினேன்
அறை இரும் கழலவன்
        காணும் ஆசையால்
நிறை இரும் பல் பகல்
        நிருதர் நீள் நகர்ச்
சிறை இருந்தேனை அப்
        புனிதன் தீண்டுமோ?

பொறுத்திருந்தேன்; உயிர் பாதுகாத்தேன்; இராமனைக் காணும் ஆசையால், இந்த அரக்கர் நகரில் சிறை இருந்த என்னை அந்தப் புனிதன் இனித் தீண்டுவானோ?

***

அறை இருங்கழலவன் - ஒலிக்கின்ற பெரிய வீரக்கழலை அணிந்த இராமனை; காணும் ஆசையால் - மீண்டும் காணப் பெறுவேன் என்ற ஆசையினால்; இருந்து - இங்கே இருந்து; பொறை ஆற்றி - எல்லாத் துன்பங்களையும் பொறுத்துக்