பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

யுகங்கள் சேர்ந்து ஒருநாள் என்று சொல்லப்படுகிற பிரமனது ஆயுளாகிய ஆண்டுகள் எல்லாவற்றிலும்; உலகம் ஏழும் ஏழும் - ஈரேழு பதினான்கு உலகங்களும்; வீவுற்ற ஞான்றும் - அழிவுற்ற போதும்; இன்று என இருத்தி - இன்று போலவே என்றும் சிரஞ்சீவியாய் இருப்பாயாக; என்றாள் - என்று சீதை அநுமனை வாழ்த்தினாள்.

***


மீண்டுரை விளம்பலுற்றாள்
        விழுமிய குணத்தோய்! வீரன்
யாண்டையான் இளவலோடும்
        எவ்வழி எய்திற்று உன்னை?
ஆண்டகை அடியேன் தன்னை
        ஆர் சொல அறிந்தான் என்றாள்
தூண் திரண்டனைய தோளான்
        உற்றது சொல்லலுற்றான்.

ஒருவாறு தனது பொங்கிய உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக்கொண்டு தேவி கேட்கிறாள் :

“உயர்ந்த குணமுடைய அநும! இரகுவீரன் இளைய பெருமாளுடன் எங்கிருக்கிறார்? அவர் உன்னைப் பெற்றது எப்படி? நான் இங்கு இருக்கும் நிலையை அவருக்கு யார் சொன்னார்.”

இவ்வாறு சீதா பிராட்டி கேட்கவே, மானின் பின்னே சென்றது முதல் அதுவரை நிகழ்ந்தவற்றையெல்லாம் சாங்கோபாங்கமாகக் கூறினான் அநுமன்.

***

மீண்டு உரை விளம்பல் உற்றாள் - மறுபடியும் சீதா தேவி அநுமனை நோக்கிச் சொல்கிறாள்; விழுமிய குணத்தோய் - சிறந்த நற்குணங்கள் பொருந்திய அநுமனே!