பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

கண்டனர். அவர்களை உடன் கண்டுக்கொண்டான் விபீடணன். இராமனிடம் அவர்களை இழுத்துச் சென்றான். விவரத்தைச்ம் சொன்னான். அண்ணல் அவர்கட்கு அபயம் அளித்தான். இலங்கேசனுக்குச் சில செய்திகளைச் சொல்லி அனுப்பினான்.

இராவணன் மந்திராலோசனை நடத்திக் கொண்டிருந்தான்; அறிவுரை கூறிய மந்திரி மாலியனைக் கடிந்தான். பிரகதத்தன் பேசுகையில் ஒற்றர்கள் அங்கு வந்தனர். இராமன் கூறிய செய்திகளைக் கூறினர். இராவணனை வாழ்த்தினர்.

இராமன் சுவேல மலை மீதேறினான் - இலங்கையைக் கண்டான். அதே சமயம்,

மந்திராலோசனை சபையில், சேனைத்தலைவன், “இப்போது செய்யவேண்டியது போரே. வலிய அவர்களே இங்கு வந்துவிட்டதால், நன்மையே. ஆயிரம் வெள்ளம் சேனை நமக்குள்ளது. எனவே நமக்கு வலிமையைப் பற்றி கவலையில்லை. நீ எனக்கு விடை கொடு. நான் பகை வென்று வருகிறேன்!” என்றான் இராவணனிடம்.

ஆனால் மாலியனோ இராவணனுக்கு இராம இலட்சுமணர் தெய்வீகத் தன்மையைப் பற்றி எடுத்துரைத்தான். அநுமன் நம் நாட்டில் புகுந்து காவல் தேவதை இலங்கா தேவியை வென்ற செய்தியையும் கூறினான். “நாட்டின் நடப்புக்களோ நிம்மதியைத் தருவதாக இல்லை. நம் அரக்கர் குலத்தை முன்னர் திருமால் ஒடுக்கியதை அறிவோம் அங்கனம் இருக்க, இப்போது நிகழும் நிகழ்ச்சிகள் அச்சத்தைக் கொடுப்பதாக உள்ளன. எனவே, அழிவைத் தடுக்க, சீதையை இராமனிடம் கொடுத்தலே சரி” என்று வற்புறுத்திக் கூறினான்.

ஆனால் இராவணனோ அவன் அறிவுரைகளுக்குச் செவி சாய்க்கவில்லை. மாறாக, அவனை எள்ளி நகையாடினான். தன்னைப் பற்றி பெருமை அடித்துக்கொண்டான்.