பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

255


இராமபிரானும் அவன் தம்பியும் சுவேல மலையின் உச்சியில் ஏறி இலங்கைக் கரையைப் பார்த்து அதிசயித்த போது, இராவணன், இலங்கையின் மிக்க உயரமான கோபுரத்தை அடைந்தான். ஏன்? வானரப் படையைக் கண்டு, சீர்தூக்கிப் பார்க்க.

இராமனைக் கண்டான், மருண்டான்.

இலங்கையின் வடதிசையின் இருந்த வாயிலின் கோபுரத்தின் மீது ஏறி நின்றான் இராவணன். அவனுடன் அவனுடைய படைத்தலைவர்களும் இருந்தனர்.

இவர்களைக் கண்ணுற்ற இராமன் விபீடணனை, இவர்கள் ஒவ்வொருவரும் யாரென்று கூறும்படி கட்டளையிட்டான். விபீடணன் அவர்களைச் சுட்டிக் காட்டிக் கூற ஆரம்பிக்கு முன்னரே பாய்ந்தான் சுக்ரீவன் சுவேல மலையிலிருந்து. யார் மீது? இராவணன் மீது. இருவருக்கும் நீண்ட நேரம் போர் நடந்தது. வெற்றி தோல்வியின்றி வெகு நேரம் மற்போர் நடந்தது. சுக்ரீவனை நீண்ட நேரம் காணாததால், இராகவன் கவலையுற்றான்; வருந்தினான்; அன்பனைக் காணாது துடித்தான்.

சுக்ரீவனும் பின்னர் வந்தான். இராமனின் திருவடிகளில் பற்பல உயர் ரக மணிகளை சமர்ப்பித்தான். தொழுதான். இந்த நாயக மணிகள் எங்கிருந்து கொண்டு வந்தான் வானர கோன்? இராவணனுடைய பத்து தலைகளிலிருந்த பத்து மகுடங்களில் இருந்து. எப்படி? மல்யுத்தம் செய்தான் அல்லவா? அப்போது இராவணனது மகுடங்களைக் கீழேத் தள்ளி, இந்த அரிய மணிகளைப் பறித்துவந்தான்.

இராமன் முதலில் சுக்ரீவனைக் கடிந்தான். விபீடணனோ, இராமன் கடிந்தவுடனேயே சுக்ரீவனின் வீரதீரச் செயலை வெகுவாகப் பாராட்டினான்.