பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

வெளிவந்த தீயும், வாயினின்று வெளிவந்த புகையும் அவளது கூந்தலைத் தீய்க்கின்றன; கூந்தல் கருகி, நாற்றம் வீசுகிறது. அப்பொழுது வாலி சொல்கிறான்: “மலையில் வாழும் மயில் போன்றவளே! தடை செய்யாதே! விலக்காதே! விடு! விடு! முன்பு நான் கடல் கடைந்ததுபோல அச் சுக்கிரீவனின் உடல் குடைத்து உயிர் குடித்து விரைவில் மீள்வேன்”.

தாரை சொல்கிறாள்:

“அரசே! முன்னை நான் நின் புயவலியை எதிர்த்து நிற்க இயலாது ஒடி ஒளிந்த அந்த சுக்கிரீவன் இப்பொழுது அதிக வலிமை பெற்றான் அல்லன். மீண்டும் உன்னோடு போர் செய்ய வந்திருப்பது எதைக் குறிக்கிறது? பெருந்துணை பெற்றிருப்பதையே குறிக்கிறது”.

தாரை மேலும் சொல்கிறாள்:

“இராமனுடைய நட்பைப் பெற்றுவிட்டான் சுக்கிரீவன். அந்த இராமன் உன் உயிரைப் போக்க முன் வந்துளான் என்று அறிகிறேன்”.

வாலி பதில் சொல்கிறான்:

“அடி பாவி! பெரும் தவறு செய்துவிட்டாய் உலக மக்களுக்கு அறவழி காட்டும் அண்ணல் இராமனுக்கு அபசாரம் செய்துவிட்டாய்!”


***

இருமையும் நோக்குறும்
        இயல்பினாற்கு இது
பெருமையோ? இங்கு இதில்
        பெறுவது என் கொலோ?
அருமையின் நின்று உயிர்
        அளிக்கும் ஆறு உடைத்
தருமமே தவிர்க்குமோ
        தன்னைத் தான் அரோ