பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

115

ஆனால் தாரையோ அன்புள்ள மனைவியாக மட்டும் இருக்கவில்லை. அறிவு படைத்த மதி மந்திரியாகவும் அல்லவா இருந்திருக்கிறாள். ஆதலால் முன் கூட்டியே ஒற்றாடி, இதுவரை பதுங்கிக் கிடந்த சுக்ரீவன் இன்று போருக்கு எழும்பக் காரணம் என்ன? ஏதோ ஒரு நல்ல துணை அவனுக்குக் கிடைத்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறாள். அப்படித் துணையாக வந்திருப்பவர் சாதாரண ஆளில்லை, மிக்க ஆற்றல் படைத்த ராமனே என்பதையும் தெரிந்திருக்கிறாள். ஆதலால் ஆயவனுக்கு இன் உயிர் நட்பு அமைந்து இராமன் உன் உயிர் கோடலுக்கு உடன் வந்திருக்கிறான் என்றும் சொல்லித் தடுக்க முனைகிறாள். ராமன் இப்படி சுக்ரீவனுக்குத் துணை வந்திருக்கிறான் என்று தாரை சொன்னதும் அந்த ராமனாம் சக்கரவர்த்தித் திருமகனைப் பற்றி முன்னர் தான் கேட்டிருந்த செய்திகளை எல்லாம் நினைக்கிறான் வாலி. தருமத்தின் தனிமை தீர்ப்பவன், அறத்தின் மூர்த்தியாக விளங்கிடும் இராமனுக்கு எத்தகைய ஒரு பெரிய அவலத்தைத் தேடி வைத்துவிட்டாள் தன் துணைவி என்று அவள் பேரிலேயே திரும்புகிறான். சொல்லுகிறான் வாலி, ஆம் வாலி சொல்வதாகக் கம்பன் கூறுகிறான்.

உழைத் வல் இருவினைக்கு
    ஊறு காண்கிலாது
அழைத்து அயர் உலகினுக்கு
   அறத்தின் ஆறெலாம்
இழைத்தவற்கு, இயல்பல
    இயம்பிஎன் செய்தாய்
பிழைத்ததனை பாவி உன்
    பெண்மையால் என்றான்
.

அடிபாவி, உன் பெண் புத்தி உன்னை விட்டுப் போகவில்லையே. அப்படியே எதையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் பெண்ணாய் பிறந்திருப்பாய் அல்லவா,