பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

கம்பன் சுயசரிதம்

தமுக்குப் போட்டுத் தெரிவிக்க வேண்டிய அவசியமும் இல்லைதானே. ஆதலால் டிகேசி இந்த வரியையே எடுத்துப் போட்டுவிட்டு அந்த இடத்தில் வேதம் என்ற உருவுடையாய் மிதிலையர்தம் உயிர் அனையாய் என்று ஜனகனை விளிப்பதாக அமைத்துவிட்டார்கள். இந்தத் திருத்தத்தோடு பாடலைப் பாடினார்கள். அவ்வளவுதான். அந்தப் பாடலை அன்றிரவு எத்தனை தரம் சொல்லிச் சொல்லி மகிழ்ந்திருப்பேன் என்று நினைக்கிறீர்கள்? பாட்டு புதிய உருவமே பெற்று விடுகிறது இந்தத் திருத்தத்தால் என்று சொன்னால் அது மிகையே ஆகாது.

கம்பன் கவியைத் திருத்துகிறார்கள், திருத்துகிறார்கள் என்று குறைகூறும் அன்பர் பலர். ஒரு சிலர் கம்பராமாயணத்தைப் படித்தே இருக்கமாட்டார்கள். ஏன் தமிழ்க் கவிதைப் பக்கமே நெருங்கியிருக்க மாட்டார்கள். அதன் குளிர் நிழலிலே தங்கியிருக்க மாட்டார்கள். இவர்களும் நிரம்பத் தெரிந்தவர்கள்போல டிகேசி கம்பனை எப்படித் திருத்தலாம்? அவர் பல பாடல்களைக் கம்பன் பாட்டல்ல என்று ஒதுக்கலாம்? என்று கூக்குரல் போடுவார்கள். மற்றொரு கூட்டத்தார் அச்சில் கண்டது அத்தனையும் சத்தியம் என்ற மனப்பான்மையோடே பல வருஷ காலம் கம்பராமாயணத்தைப் படித்தவர்கள், பாடல்களை மனனம் பண்ணியவர்கள், மேடைகளில் ஏறி அவைகளை வெளுத்துக் கட்டியவர்கள். இவர்கள் கம்பன் பாடல்களை டிகேசி திருத்துகிறாரே என்று குறைபடுவதில் அர்த்தம் உண்டு. அத்தகைய அன்பர்கள் டிகேசியை அணுகி விளக்கங்கள் கேட்டால் அவர்கள் சொல்லத்தான் சொல்லுவார்கள். சொன்னதைக் கேட்டுத் திருப்தி அடைவதோ அன்றி, திருப்தி அடையாமல் இருப்பதோ அது அவர்களுடைய மனப்பக்குவத்தையும் பண்பையும் பொறுத்தது.