பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

143

இன்றைய தமிழ்க்கவி உலகில் டிகேசி மதித்த கவிஞர் இருவர் தான். பாரதியும் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களுமே. பாரதியாரோடு நெருங்கிய தொடர்பு டிகேசிக்கு இருந்திருக்க வேண்டும். நேரில் அறியேன். ஆனால் கவிமணி அவர்களை டிகேசி எப்படிப் பாராட்டினார்கள் என்பதை அறிவேன். அதைப்போலவே கவிமணியும் டிகேசியை மிகவும் மதித்தார்கள். பாடிப்படித்தமுதம் பாவில் வடித்தெடுத்து நாடி நமக்குதவும் நல்லறிஞன் என்று கூறுவார்கள் ஒரு தரம் அதில் திருப்தி அடையாமல் கம்பன் கவியின் கவி அமுதம் ஊட்டி நம்மை அம்புவியில் தேவராய் ஆக்கிடுவான் என்று பாராட்டுவார்கள். கவிமணியவர்கள் டிகேசி கம்பராமாயணத்திலிருந்து செருகு கவிகள் அகற்றுவது பற்றியும், திருத்தங்கள் செய்வது பற்றியும் என்ன நினைக்கிறார்கள் என்று நாம் அறிய வேண்டுவதுதானே. கவிமணியவர்கள் அமரர் ஆவதற்கு இரண்டு மாதத்திற்கு முன்னே நான் அவர்களைச் சென்று கண்டேன். பலவிஷயங்கள் பேசிய போது இதைப் பற்றியும் பேசினோம். என்ன தம்பி என்ன நினைக்கிறாய் டிகேசி அவர்கள் செய்துள்ள திருத்தங்களைப் பற்றி, செருகு கவிகளை கம்பரமாயணத்திலிருந்து அகற்றியதைப் பற்றி என்று கேட்டார்கள். நான் என்ன சொல்வது, டிகேசி சொன்னது அத்தனையும் சரி என்றுதான் சத்தியம் செய்பவன் ஆயிற்றே நான் என்றேன். அவர்கள் சொன்னார்கள், டிகேசி சொல்வது போல கம்பன் சப்பைப் பாடல்களையே பாடி இருக்க முடியாது என்று சொல்வது சரியல்ல, சில சமயம் வெறும் செய்யுள்களாகவே அவன் பாடி இருக்கவும் கூடும். ஆனால் டிகேசி அவர்கள் கம்பனை ஒரு சமயம் தன் அருமந்த குழந்தையாகவும், ஒரு சமயம் தன் வழிபடுதெய்வமாகவும் வைத்திருந்திருக்கிறார்கள். அதனால்தான் இத்தனை துணிவோடு காரியங்கள் செய்தார்கள் என்றார்கள். இதற்கு விளக்கம் கேட்டேன் நான். சொன்னார்கள். குழந்தையிடம் தந்தைக்கு இருக்கும் அன்பு