பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

கம்பன் சுயசரிதம்

ஒரு நல்ல சாதனம் என்று கண்டவர் அவர் கதையையும் நன்றாக அமைத்துக் கொடுத்துவிட்டார். இத்தகைய நல்ல அஸ்திவாரத்தின் மேல்தான் தன் காவிய மாளிகையைக் கட்ட ஆரம்பித்திருக்கிறான் கம்பன். அஸ்திவாரம்தான் அவருடைய அஸ்திவாரமே தவிர, மேல் கட்டுக் கோப்பெல்லாம் இவனுடைய் சொந்தமே. வான்மீகரது கதையில் எங்கெல்லாம் அழகுணர்ச்சி குன்றுகிறதோ அங்கெல்லாம் கம்பனது அழகுணர்ச்சி கொட்டும். எங்கெல்லாம் தமிழர்களது பண்பாடு, நாகரிகம், பண்பு பாதிக்கப்படும் என்று கருதினானோ அங்கெல்லாம் புதிய முறையிலே கட்டிடம் திருத்தி அமைக்கப்படும். கம்பன் கதையிலுள்ள சம்பவங்களைச் சித்தரிக்க முயன்றாலும் சரி, பாத்திரங்களில் உள்ள உணர்ச்சிகளையோ மனோ விகாரங்களையோ வெளியிட விரும்பினாலும் சரி, கவிதா கருத்துக்கள் நான் முந்தி நீ முந்தி என வந்து விழுந்து பணி செய்யும். கம்பனது அழகுணர்ச்சியும் கற்பனா சக்தியும் இசை ஞானமும் கடைசி வரை அவனுக்கு துணை நின்று காவிய மாளிகையை உருவாக்க உதவுகின்றன.

இப்படி நல்லதொரு அஸ்திவாரத்திலே எழுப்பப்பட்ட அழகிய காவிய மாளிகையை முதலில் கொஞ்ச தூரத்திலிருந்தே பார்க்கலாம். இந்த மாளிகையை அப்படி நின்று பார்த்தவர்களுக்கு எழுகின்ற முதல் உணர்ச்சி அதன் காம்பீர்யம்தான். இமயமலை எவ்வளவு கம்பீரமாக வான்நோக்கி வளர்ந்திருக்கின்றதோ அவ்வளவு கம்பீரத்துடன் கம்பனது காவிய மாளிகையும் காட்சி அளிக்கிறது. கம்பனுடைய காவியத்தைப் படிக்கும்போது மாமல்லபுரத்துப் பிரம்மாண்டமான கற்கோயில்களைப் பார்க்கும்போதும் சிரவனபெலகோலாவிலுள்ள கோமாடேஸ்வரனுடைய அத்தாப் பெரிய சிலையைப் பார்க்கும்போதும் உண்டாகும் உணர்ச்சிதான் உண்டாகிறது.