பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

கம்பன் சுயசரிதம்


என்னுடைய காவியத்தில் இந்தக் காதல் கட்டத்தில் இந்த வில் குறுக்கே கிடந்து எவ்வளவு வேதனை கொடுத்தது தெரியுமா? அந்த வேதனையைக் கூட

போதகம் அனையவன் பொலிவு நோக்கி இவ்
வேதனை தருகின்ற வில்லை நோக்கி

என்று குறிப்பாகச் சுட்டியிருக்கிறேனே கவனித்தாயா.

இந்த ஒரு வேதனைதானா காவியம் எழுதும்போது இல்லை. இந்தப் பொல்லாத தமிழர்கள் இருக்கிறார்களே, அவர்கள் கற்பனை பண்ணிய கற்பொழுக்கம் இருக்கிறதே அது ஒரு அசாத்தியமானதொன்று.

“மண்டினி ஞாலத்து மழைவளம் தரும்
பெண்டிராயிற் பிறர் நெஞ்சு புகார்”

என்று பிறர் நெஞ்சு புகுவதே கற்பொழுக்கத்திற்குத் தவறு என்றல்லவா கூறியிருக்கிறார்கள். அப்படியிருக்க, பிற நாட்டில், அயலான் மனையில், அவன் மயிர் பிடித்திழுத்து மடிமீது வைத்து எடுத்துச்சென்று சிறை வைக்கப்பட்ட சீதையின் கற்பொழுக்கத்திற்கு இந்தத் தமிழர்கள் குறை கூறாதிருப்பார்களா? ஆதலால் தான், சீதையை அவள் இருந்த பர்ணசாலையில் அந்தப் பர்ணசாலை கட்டியிருந்த இடத்தை எல்லாம் சேர்த்து “கீண்டான் நிலம் யோசனை கீழொடு மேல்” என்று மாற்றினேன் - இதைத் திரும்பவும் கீண்டுகொண்டெழுந்தேகினன் கீழ்மை யான்” என்றும் குறித்தேன். என்னை என்னதான் செய்யச் சொல்லுகிறாய். நல்ல பலாப்பழம், தேன் சொட்டும் சுளைகள் உள்ளே இருக்கின்றன. அதைச் சுற்றி சக்கையும் பிசினும், தோலும் முள்ளும், இருந்தால் அவற்றை அகற்றிவிட்டு, சுளையை மட்டும் எடுத்து தமிழர்களுக்கு விருந்தளிக்க நான் தயங்கலாமா? இப்படிப்பட்ட முயற்சியில் தான் நான் காவியம் உருவாக்கியிருக்கிறேன்.