உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

45

திருப்தியடைந்துவிடமாட்டான். அவன், சொன்னால் அதற்கு ஒரு தனிப் பண்பே இருக்கும்.

இலக்குவனும் இந்திரசித்தனும் நிகும்பலையில் போர் புரிகின்றார்கள். இந்திரசித்து விடும் சரங்களையெல்லாம் இலக்குவன் தடுத்து விடுகிறான். அவ்வாறு தன் வலிமிகுந்த படைகள் எல்லாம் பலனற்றுப் போவதைக் கண்ட இந்திரசித்தன் கடைசியாக நாராயணாஸ்திரத்தையே எடுத்து இலக்குவனைக் குறி பார்த்து விடுகிறான். நாராயணாஸ்திரம் தானே அந்த ராம ராவணர் காலத்து அடாமிக்பாம். அந்த நாராயணா ஸ்திரம் என்ன செய்தது தெரியுமா? இலக்குவனை வலம் வந்தது. நமஸ்கரித்தது. இந்திரசித்தனிடமே திரும்பவும் வந்து சேர்ந்தது. பார்த்தான் இந்திரசித்தன். “இத்தகைய புயவலியும், இறைவனது அருள்வலியும் கொண்ட இந்த ராம லக்ஷ்மணர்களோடு போர் புரிந்து வெற்றி பெறுவது என்பது இயலாத காரியம். அரக்கர்கள் வாழ வேண்டுமானால் அவர்கள் சந்ததி அழியாதிருக்க வேண்டுமானால் சீதையை அவர்களிடம் திருப்பி அனுப்பிவிடுவதுதான் சரி. அவர்களும் பெருந்தன்மையுடனே போரை நிறுத்தி விடுவார்கள். இதுவரை நாம் செய்த பிழைகளையெல்லாம் மன்னித்து விடுவார்கள் என்றெல்லாம் எண்ணினான். சரி, கடைசி முறையாக நாம் சொல்ல வேண்டியதையும் தந்தையிடம் தெரிவித்து விடுவோமே இப்போதாவது திருத்த முடிகிறதா என்று பார்ப்போமே, என நினைத்து மாயையில் மறைந்து இராவணன் கொலுவீற்றிருக்கும் அந்த ராஜ சபைக்கே வருகிறான். நடுங்கும் உடலோடும் நனைந்த உடையோடும் இராவணனைப் பார்த்தே பேச ஆரம்பித்துவிடுகிறான். அவன் பேச்சை கம்பன் சொல்கிறான்.

நிலஞ் செய்து விசும்பும் செய்து
நெடியவன் படைநின்றானை
வலம் செய்து போவதா னால்
மற்றினி வலிய துண்டே