பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

கம்பன் சுயசரிதம்


எழுந்ததின் காரணமாகவே, காவிய நாயகன் வழிபாடும் ஆரம்பித்திருக்கிறது. ரகுராமன், சீதாராமன், கோதண்டராமன், வேங்கடராமன், கல்யாணராமன், சந்தானராமன், வல்வில் ராமன் என்னும் எண்ணற்ற திருப்பெயரால் அந்தக் காவிய புருஷன் அழைக்கப்பட்டிருக்கிறான், என்றால் அதற்கு இந்தக் காவிரிக்கரையில் உள்ள கோயில்களில் உருவாக்கி வைத்திருக்கும் சிற்ப உருவங்களும், அச்சிற்ப உருவங்களை வடித்த சிற்பிகளின் கற்பனையுமே காரணம். தஞ்சை ஜில்லாவில் காவிரி தீரத்தில் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் ஒவ்வொரு விஷ்ணுகோயிலிலும் ராமனுக்குத் தனி சன்னதி உண்டு. சில இடங்களில் சிலா ரூபமாகவும் பல இடங்களில் செப்பு விக்கிரகமாகவும், சீதா லக்ஷ்மண அனுமத் சமேதனாய் ராமன் நின்று கொண்டிருக்கிறான். தஞ்சை ஜில்லாவில் வடுவூர் ராமனும், தில்லை விளாகம் ராமனும் பிரசித்தமானவர்கள். தில்லை விளாகம் ராமன் அலங்கரிக்கப்பட்ட பெரிய மேடையில் சர்வாலங்கார பூஜிதனாக லக்ஷ்மணனுடனும் சீதையுடனும், அனுமனுடனும் நின்று கொண்டிருக்கிறான். மாயூரம் திருவாரூர் பாதையில் உள்ள முடிகொண்டான் என்ற பெரிய ஊரில் உள்ள ஒரு சிறிய கோயிலிலும் ராமன் சீதா லக்ஷ்மணரோடு நின்று கொண்டிருக்கிறான்.

இவனையும் கண்டு தரிசித்துவிட்டு இன்னும் கொஞ்சம் தெற்கே போய் மேற்கே திரும்பினால் நன்னிலத்துக்கு வந்து சேரலாம். இந்த நன்னிலத்துக்கும் வடமேற்கே நாலு மைல் தொலைவில் அடம்பர் என்று ஒரு சிற்றூர் இருக்கிறது. அந்த ஊர் பாடல் பெற்றது. பாடல் என்றால் ஏதோ சம்பந்தரோ அல்லது அப்பரோ, இல்லை திருமங்கை ஆழ்வார் தாமோ பாடியது அல்ல. அந்த ஊரில் வழங்கும் பாடல் இதுதான்.

ஆயிரம் வேலி அதம்பார்
ஆனை கட்டும் தாள்
வானைமுட்டும் போர் – அதில்
ஆறுகொண்டது பாதி