பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

கம்பராமாயணம்



காக அவன், தன் உயிரையும் பணயம் வைப்பான்; ‘சீதையை முதலில் கண்டு செய்தி கொண்டு வந்து தருவதே தன் முதல் கடமை’ என்று எந்நேரமும் அதே சிந்தனையில் ஆழ்ந்துகிடக்கிறான்; அவனுக்கு உறக்கமே இல்லை; ‘கடமை கடமை கடமை’ என்று எந்நேரமும் உச்சரித்துக் கொண்டிருக்கிறான்” என்று நயம்படப் பேசி அவன் மனத்தை மாற்றினாள். அனுமனும் தாரை உடன் இருந்து தக்க சொற்களை எடுத்துக் கூறி அவன் சினத்தைத் தணிவித்தான்.

அங்கதன் இலக்குவனைக் கண்டு வணங்கி அடி பணிந்தான்; சினம் ஆறிய இலக்குவன், அங்கதனிடம் தன் வருகையைச் சுக்கிரீவனிடம் தெரிவிக்குமாறு சொல்லி அனுப்பினான்.

அங்கதன் சுக்கிரீவனை அடைந்து, இலக்குவன் கொண்ட சீற்றத்தையும் தாரையின் கூற்றினால் அவன் அடைந்த மாற்றத்தையும் எடுத்துக் கூறி இலக்குவனைப் போற்றி வரவேற்க அழைத்தான்.

“ஏன் இலக்குவன் வருகையைத் தன்னிடம் தெரிவிக்கவில்லை” என்று மயக்கம் நீங்கிய நிலையில் வினவினான். அங்கதன், நடந்த செய்தியைச் சொல்லி, இனிக் காலம் தாழ்த்தாமல் இலக்குவனை வந்து காண்க என்று வேண்டினான் சினம் தணிந்த நிலையில் இருந்த இலக்குவனைச் சுக்கிரீவன் தோள்கள் ஆரத் தழுவிக் கொண்டான்; அவனைத் தக்க தவிசு ஒன்றில் அமருமாறு வேண்டினான்.