பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

கம்பர்



காப்பியம் என்ற சொல்லின் பொருள் என்ன? காப்பிய இலக்கணம் என்ன? நம்நாட்டவர், மேனாட்டவர் கண்ட இலக்கணங்கள் என்ன? மேனாட்டவர்தம் இலக்கணம் நம் காப்பியங்கட்கு எத்துணையளவு பொருந்தும்? இவ் வினாக்களை எழுப்பிக்கொண்டு, விடை விளக்கம் கூறிக்கொண்டிருந்தால் கம்பரிடத்து வருவதற்கு மணிகள் பல ஆகும். சொற்பொழிவுக்கு இயிைடையே அவற்றைத் தொட்டுச் செல்வதன்றித் தொடக்கத்து விரித்துக் கொண்டிருப்பது, அவைக்குச் சுவைபடாது. நம் முன்னோர் நடைமுறையிற் கொண்ட ஓர் இலக்கிய வுண்மையைத் திறனாய்வாளர்கள் இன்று அழுத்தமாகக் கூறுகின்றனர். நாம் உடலுக்குச் சட்டை தைக்க வேண்டுமெனின் நம் உடம்பை அளந்து பார்க்க வேண்டுமே தவிர, நம் அரிய பெரிய நண்பனாயினும் அவன் உடலளவு நமக்கு ஒத்துவருமா? இரட்டைப் பிள்ளைகளுக்குக்கூடச் சட்டையளவு தனித்தனிதானே பார்க்க வேண்டும். ஒரு காப்பியத்தைப் படித்து ஆராய முனையும் போது, அதற்குத் திற்ன்கோல் அதனினின்றே வடிக்க வேண்டும். இன்னொரு காப்பியக் கோலைக் கைக்கொள்ள முற்படுவது நெறிப்பிசகாகும். 'இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயம்புக' என்று அளவெடுக்கு முறையைத் தமிழ்த் திறனிகள் அழகாக மொழிந்தள்ளனர். தன்மை மொழியியல் என்பது மொழியியல் வகைகளில் ஒன்று. ஒரு மொழியின் ஒலி, சொல், தொடரமைப்புக் கூறுகளைக் கிடந்தபடி கண்டு அதனளவில் நின்று ஆராய்வதே இம்மொழியியலின் நோக்கம். இது போலவே இலக்கியத் துறையிலும் தன்மைத் திறனாய்வு என்னும் நேர் வகையை நாம் வளர்க்க வேண்டும். ஒரு நூலின் தன்மையை மற்றொரு நூலுக்குச் சார்த்தி யளக்கும் புறவளவு உண்மையை மறைத்து விடும்.

ஒப்புமை முறை

நூலுக்கு நூல் ஒற்றுமை வேற்றுமை காண்பது இன்று ஒருவகை இலக்கியப் போக்காக ஒருசார் அறிஞர்களிடைப் பரவிவருகின்றது. இது பெருமையாகவும் கருதப்படுகின்றது. ஆயினும் ஒரு நூலின் ஆற்றல் ஒப்புமை முறையால் வெளிப்படுவதில்லை. இரு மனிதர்களை அவர்களின் குணங்களை ஒப்பிட்டுக் கூறுவதில் எவ்வளவு தொல்லையுள்ளது? ஒருவர் பண்பிற் சிறந்தவர், மற்றவர் அறிவிற் சிறந்தவர் என்று பாராட்டுவதாக வைத்துக் கொள்ளுவோம். இப்பாராட்டு இருவருக்குமே சினத்தை உண்டாக்கலாம். இருவரும் பண்பிலும் அறிவிலும் நிகரானவர் என்று புகழ்ந்தாலும், தன்னை ஏற்றமாக உரைக்கவில்லையே என்று அவருள் ஒருவர் கசக்கலாம். ஒரு மேடையில் உள்ள பலரை அவர்