பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

கம்பர்


ஒருமையியைபு உடையது எனவும் முன்னர்க் கூறும் திருமண முதலிய ஒன்பது காதைகளும் காப்பியத்துக்குப் புறமாவன எனவும் கூறலாமா?

தஞ்சைப் பெருவுடையார் கோபுரம் கட்டுவதற்கு இராசராசசோழன் சாரப்பள்ளம் அமைத்தாற்போல, முக்கியமான இடங்களைக் கொண்டுவந்து காட்டுவதற்குமுன் முன்புனைவு செய்து கொண்டு போதல் புலவன் தொழில். இல்லாவிட்டால் சிறந்த இடம் சிறப்பாகப் படா தொழியும். சிறப்பு என்பது பலவாறு ஒட்டிய சூழ்நிலையைப் பொறுத்தது. சூழ்நிலையைச் சிறப்பாகப் புனைந்து காட்டாவிட்டால் சுவை தோன்றாது; சுவை முரண் தோன்றினாலும் தோன்றி விடும். ஆதலின் தள்ளுவது கொள்ளுவது என்ற நிலையில் வெட்டொன்று துண்டிரண்டு என்ற துடிப்பில் காப்பியப் பார்வை பாராது, நூல் எழுதிய புலவன் பார்வை முதற்கண் நமக்கு வேண்டும். அப்பார்வை நான் இன்றைய முதற் சொற்பொழிவில் வலியுறுத்த விரும்பும் பார்வை ஏதுவென்றால் முழுப் பார்வையாகும். புலவன் படைப்பு முழுவதையும் உளங்கொண்டு பார்க்கும் ஒருமைப் பார்வையே நான் வேண்டுவது. ஒப்புப் பார்வையும், நூலுக்குள் ஒரு சில செய்யுளைக் காணும் உதிரிப் பார்வையும் காப்பியப் பார்வையாகா.

துண்டுப் பார்வை

தமிழ்க் காப்பியங்களில் மக்களிடைப் பரவி வருகின்ற, பலரால் பரப்பப்படுகின்ற ஒரு காப்பியம் இராமாயணம். இப்பரப்பைக் கண்டு ஒருபால் மகிழ்கின்றேன்; ஒருபால் கவல்கின்றேன். இராமாயணத்தில் நல்ல பாடல்களைத் திரட்டிப் பல பதிப்புகள் வெளியிடுகின்றனர். தனித் தனிச் செய்யுட்களில் நயங் காண்கின்றனர். பல தனிப் பாடல்களை வரப்பண்ணுகின்றனர். இவ்வகையிலேனும் இராமாயணம் பரவுகின்றது கண்டு மகிழ்கின்றோம். இன்றுள்ள மக்கள் தம் வாழ்க்கை நிலையில் உதிரிப் பாடல்களாகவேனும் இலக்கிய அறிவு பெற்றாற்போதும் என்று எண்ணுகின்றோம். முழுமையாகப்படிக்க வாழ்க்கைப் போராட்டம் இடம் கொடுக்கவில்லை; இடம் கொடுக்குமளவில் சில பாடல்களையேனும் தெரிந்து கொள்ளட்டும் என்று அமைதி யடைகின்றோம். ஆனால் இத்துண்டுப் பார்வை காலப்பார்வையாகுமே யன்றிக் காப்பியப் பார்வையாகாது. முழுப்பார்வை பாராவிட்டால் கம்பரின் அறிவுப் பெருங்கூறுகள் ஒளிந்து விடுகின்றன. அவர் அமைத்த நலப்பாடுகள் புலப்படா தொழிகின்றன. காப்பியம் பரவி வருகின்ற இக்காலத்தில் உரிய பார்வையோடு மக்களிடம் பரப்பாவிட்டால், படிப்பவர்களும்