பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பியப்பார்வை

25


ஒவ்வொரு காண்டமும் இருபாகங்களாகப் பதிப்பிக்கப்படுகின்றது. பாட பேதங்களின் வெள்ளப்பெருக்கை நோக்கினால் இன்னொரு இராமாயணம் அளவு உள்ளது. பாடபேதம் இல்லாத பாட்டு ஒன்று உண்டா என்று பல்கலைக்கழகப் பதிப்பை ஆசையோடு புரட்டிப்பார்த்தேன். ஒரு செய்யுள் சுந்தரகாண்டத்து உருக்காட்டுப் படலத்துக் கிடைத்தது.

எய்தினள் பின்னுமெண்ணாதவெண் ணியீங்கு
உய்திற மில்லையென் றொருப்பட் டாங்கொரு
கொய்தளிர்க் கொம்பிடைக் கொடியிட்டேதலை
பெய்திடுமேல்வையில் தவத்தின் பெற்றியால்.

இராமபிரான் இனி ஒருநாளும் வாரான், வந்து மீட்கான் என்று தானே இறந்து விடுதலை பெறத் துணிந்த சீதை தூக்கிட்டுக் கொள்ள எண்ணிக் குருக்கத்தி மரத்துக்குச் செல்லுகின்றாள். ஈதலாது இடமும் வேறில்லை என்றொரு போதுலா மாதவிப் பொதும்பர் எய்தினாள் என்ற பாட்டுக்குப் பின் மேலே காட்டிய பாடபேதம் இல்லாத பாட்டு வந்துள்ளதே என்று வியந்தபோது, இப்பாடல் 'ஒரே ஒரு சுவடியில் மட்டும்தான் காணப்படுகின்றது. ஏனைச் சுவடிகளிலும் இப்பொழுதுள்ள அச்சுப் புத்தகங்களிலும் காணப்படவில்லை' என்ற ஒரு விளக்கத்தைக் கண்டேன். பாடபேதமில்லா ஒரு பாட்டின் பிறபபும் ஐயத்திற்கு உரித்தாயிற்றே என்று சிந்தித்தேன்.

பாடபேதம் பாட்டுக்கு ஒரு சிறப்பு என்ற நிலை இலக்கிய உலகில் வளர்ந்துவிட்டது. பாடபேத வளர்ச்சிக்கக் கூட ஒரு வரலாறு எழுதலாம் போலும். சில பல பாடல்கள் செருகு கவிகள் என்று கூறுவர். அச்செருகுகளுக்கும் பல பாடபேதங்கள் உளவே. ஒரு சில பாடல்கள் மிகச் சில ஏட்டுப் படிகளிலேதான் உள. இவற்றுக்கும் மாறுபாடங்கள் ஏறியுள்ளன. எல்லாவகைச் செய்யுட்களுக்கும் பாடத்திரிபுகள் இருப்பதைப் பார்க்கும் போது, நம் முன்னோர்கள் ஒன்றுவிடாது பதினாயிரம் பாடல்களையும் படித்தார்கள் எனவும், செருகு கருவிகள் என்று ஒதுக்காது வரப்பண்ணினார்கள் எனவும், நூலை முழுமையாகப் படிக்கும் பழக்கம் முன்பு மரபாக இருந்தது எனவும் அறிகின்றோம். அறிந்து மகிழ்கின்றோம். இனி பல பாடல்களுக்குப் பாடபேதங்கள் வரமுடியாது. ஏன் சிற்சில பாடல்களையே பொறுக்கி வைத்துக்கொண்டு படிக்கும் காலம் இது.

இராமாயணத்தின் இனிய வளர்ச்சி, அடிப்படையான வளர்ச்சி நாம் உருவாக்கும் நல்ல செம்பதிப்பைப் பொறுத்தேயுள்ளது.