பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

குலோத்துங்க சோழனுடைய பெயர்களில் ஒன்றாகும். சதகச் செய்யுள் அவனைத்தான் குறிக்கின்றது என்று வைத்துக்கொண்டால் ஒட்டக்கூத்தனை ஸ்ரீரா. ராகவையங்கார் முதலிய பண்டிதர் சொல்லும் காலத்துக்கு ஒரு தலைமுறை மேலே ஏற்ற வேண்டிவரும். ஆனால் “செந்தமிழ்"ப் பத்திரிகை மூன்றாம் தொகுதியில் நிர்ணயித்திருக்கிறபடி ஒட்டக்கூத்தன் சிலாசாசனிகளால் இரண்டாவன் என்று சொல்லப் பட்ட குலோத்துங்கனுடைய அவையில் தான் உத்தர காண்டத்தை அரங்கேற்றினான் என்று வைத்துக் கொண்டு பார்ப்போம். ஸ்ரீமத் ராமானுஜாச்சாரியார் காலமாவதற்கு முன்பே இந்தக் குலோத்துங்கன் இறந்துபோய்விட்டானென்றும் ராமானுஜர் சகம் 1059இல் பரமபதமடைந்தார் என்றும் குருபரம்பரை கூறுவதால், இந்தக் குலோத்துங்க சோழன் சகம் 1059க்கு முன் நாலைந்து வருஷங்களே ஆண்டுவிட்டு இறந்துபோயிருக்கவேண்டும் என்று ஸ்ரீமான் ராகவையங்கார் ஒப்புக்கொள்ளுகிறார். அப்படியானால் ஒட்டக் கூத்தன் தன் உத்தரகாண்டத்தை சகம் 1059க்கு முன் அரங்கேற்றியிருக்கவேண்டும். நாம் ஏற்கனவே சொல்லியிருக்கிற கர்ண பரம்பரையை ஒப்புக்கொண்டால் கம்பனும் ஒட்டக்கூத்தனும் ஏககாலத்தில் ராமாயணம் பாட ஆரம்பித்தார்கள் என்று கொள்ள வேண்டும். ஒப்புக்கொள்ளாவிட்டால், ஏற்கனவே ஆறு காண்டங்கள் பாடப்பட்டுப் புகழெய்தியிருந்தால் தான் ஒரு கவிக்கு உத்தரகாண்டம் மாத்திரம் பாட வேண்டும் என்று தோன்றுவது இயற்கை என்கிற விஷயத்தை ஒப்புக்கொண்டு, கம்பன் தன் ராமாயணத்தை சகம் 1059க்கு அநேக வருஷங்கள் முன்னமேயே பாடி முடித்துப் பேர் பெற்றிருக்கவேண்டும் என்று நாம் கூறுவதற்கு இணங்கவேண்டிவரும். எதற்கும் கம்பன் சகம் 1042க்குச் சமீபத்தில் பிறந்-