பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

வாகன சகாப்தத்தின் 8-வது நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 9-வது நூற்றாண்டின் முற்பகுதியிலும் விளங்கினான் என்றும், மேலே எடுத்துக் காட்டியுள்ள தனியன் பிரகாரம் 807-இல் தான் தன் காவியத்தை அரங்கேற்றினான் என்றும் தான் கொள்ளவேண்டும் என்று தோன்றுகிறது.

இனி, கம்பனுடைய கவித் திறமையையும் ராம பக்தியையும், அவன் வால்மீகி ராமாயணத்தைப் பின் பற்றியிருக்கிற ரீதியையும், கம்பனுக்கும் உலகத்து மகா கவிகளுக்கும் உள்ள தாரதம்மியத்தையும் பற்றி இங்கே சவிஸ்தாரமாகப் பேச உத்தேசித்து இருந்தோம். ஆனால் முகவுரை ஏற்கனவே மிகப் பெரிதாகி விட்டதாலும், இவை பின்வரும் காண்டங்களில் தான் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய விஷயங்களானதாலும், இங்கே இவைகளைப் பற்றிச் சங்கிரகமாகவே எழுதி முகவுரையை முடிப்போம்.

கம்பன் தன் ராமாயணக் கதையில் வால்மீகியை மிகவும் நெருங்கிப் பின்பற்றியிருக்கிறான் என்பது பிரசித்தம். அங்கங்கே சில மாற்றங்கள் செய்துதான் இருக்கிறான்.[1] ஆனால் கதையின் போக்கில் வால்மீகி


  1. இவைகளில் நமக்குத் தற்காலம் ஞாபகமிருக்கும் வரையில் முக்கியமானவை பின் வருமாறு:- (1) பால காண்டத்தில் வால்மீகி விஸ்தாரமாகச் சொல்லும் சுப்பிரமணிய ஜனனத்தைக் கம்பன் விட்டுவிட்டான். (2) வால்மீகி இரணியன் வதையைப் பற்றிப் பேசவில்லை. கம்பன் யுத்த காண்டத்தில் இந்தக் கதையை விஸ்தாரமாயும் கம்பீரமாயும் சொல்லுகிறான். (3) மாயையால் ஓர் அரக்கனை ஜனகன் போலச் செய்து அவனைக்கொண்டு ராவணன் சீதையைக் கலைக்க முயலுகிறான் என்று கம்பன் சொல்லுகிறான். இதுவால்மீகியில் இல்லை. (4) கம்பன், மூல பல யுத்தத்தை ஒரு பெரும் போராக்கிவிட்டான். வால்மீகியில் இதற்கு 4 சுலோகங்கள் இருக்குமோ என்னவோ.