பக்கம்:கரிகால் வளவன்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73

"என்ன, அப்படிக் கேட்கிறீர்கள்? சோழ நாட்டு மன்னன் அவன். உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் புதல்வன். அவன் கருவில் இருக்கும்போதே தந்தை இறந்தமையால், அப்போது அரசுரிமை அவனுடையதாகிவிட்டது. சேர பாண்டியர்களை வெண்ணிப் பறந்தலையில் போர் செய்து வென்றவன். அவனிடம் போனால் உங்கள் வறுமை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.”

“நாங்கள் அங்கே போய் என்ன செய்ய வேண்டும்?”

“அவனை அணுகினாலே போதும். அவனை அணுகித் தொழுது நின்றால் அவனுடைய அன்புப் பார்வை உங்கள் மேலே படும். கன்றை ஈன்ற பசு தன் கன்றைப் பார்ப்பதுபோல அன்பு ததும்ப உங்களைப் பார்ப்பான். நீங்கள் யாழ் வாசித்துத் தடாரிப் பறையைக் கொட்டுங்கள். அவற்றின் ஒலி அவன் காதில் விழுந்ததோ இல்லையோ, அவன் உங்கள் தகுதியைத் தெரிந்துகொள்வான். உங்கள் இடுப்பிலுள்ள கந்தையைக் களைந்து பட்டாடையை உடுத்துக்கொள்ளக் கொடுப்பான். நல்ல மது வகைகளை வழங்குவான். பொன்னால் செய்த தாமரையை உங்கள் தலையிலே சூட்டுவான். விறலி அணியும்படி பொன்னரி மாலையை அளிப்பான். அழகான குதிரைகளைப் பூட்டிய தேரை வழங்குவான். யானையைத் தருவான். அவற்றை அவரவர்களுக்கு நீங்கள் பகிர்ந்து கொடுக்கும்படி மிகுதியாகத் தருவான். ஊருக்குப் போகிறோம் என்று சொன்னால் எளிதிலே உங்களை அனுப்பமாட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/79&oldid=1232502" இலிருந்து மீள்விக்கப்பட்டது