பக்கம்:கரிகால் வளவன்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80


ஊர்கள் பல, நாடு முழுவதும் வளப்பத்தோடு விளங்குகின்றன. கரும்பும் நெல்லும், தென்னையும் கமுகும், மஞ்சளும் சேம்பும், மாவும் பனையும், இஞ்சியும் வளர்ந்து நல்ல பயனைத் தருகின்றன.

அங்கங்கே மகளிர் நெல்லை உலர்த்துகிறார்கள். அந்த நெல்லைத் தின்ன வரும் கோழியை ஓட்ட அருகிலே கல் இல்லை. வேறு யாதும் இல்லாமையால் தம்முடைய காதில் உள்ள குழையை வாங்கிக் கோழியின்மேல் எறிந்து ஓட்டுகிறார்கள். அந்தக் குழைகள், சிறு குழந்தைகள் விடும் விளையாட்டு வண்டிகளைத் தடுக்கின்றன.

ஒன்றுக்கு ஒன்று அருகருகாகப் பல ஊர்கள் நிறைந்தது சோழ நாடு. பகைவர்களால் உண்டாகும் அச்சமே அவ்வூர்களில் இல்லை. அந்த நாட்டில் கடற்கரையில் விளங்குவது காவிரிப்பூம்பட்டினம்.

படகிலே உப்பைக் கொண்டு வந்து நெல்லுக்கு அதை விற்று அந்தப் படகில் நெல்லை நிரப்பிக் கொள்கிறார்கள் பரதவர்கள். அந்தப் படகுகளைக் கழிகளின் பக்கத்தில் குதிரைகளைப் போலக் கட்டியிருக்கிறார்கள். நகரத்துக்குப் புறம்பே தோப்புகளும் பூஞ்சோலைகளும் செறிந்திருக்கின்றன. வலிமையைப் பெற்ற கரைகளையுடைய நன்னீர்ப் பொய்கைகள் இருக்கின்றன. அந்தப் பொய்கைகளில் பல நிறம் பொருந்திய மலர்கள் மலர்கின்றன. அவற்றுள் மிகப் பெரிய நீர்நிலைகள் இரண்டு உண்டு. அவற்றை இருகாமத் திணைஏரி என்று சொல்வார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/86&oldid=1232509" இலிருந்து மீள்விக்கப்பட்டது