உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

அம்பலம்: -

எல்லா ஊர்ச் சிவன் கோவில்களிலும் நடராசர் திரு மேனியிருப்பினும், ஆங்கெல்லாம் சிவலிங்க உருவமேமுதன்மையுடையது. நடராசர் திரு உருவமோ, ‘பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று’ என்ற அளவினதேயாம். சிதம்பரத்துப் பொன்னம்பலமும் மதுரை வெள்ளியம் பலமும். திருவாலங்காட்டு இரத்தின அம்பலமும், திருநெல்வேலித் தாமர அம்பலமும், குற்றாலத்துச் சித்திர அம்பலமும் ஆகிய ஐந்தும், மற்ற ஊர்களினும் சிறப்பாக நடராசர் நடம்புரியும் இடங்களாகும் என்ற கருத்தும் அறிந்ததே. ஆயினும் இந்த ஐந்து ஊர்களுக்குள் சிதம்பரம் தவிர, மற்ற நான்கு ஊர்களிலும் சிவலிங்க உருவமே பெரும்பாலும் முதன்மை பெற்றுள்ளன. சிதம்பரத்தில் மட்டுமே, சிவலிங்க உருவம் இன்றி நடராசர் உருவம் முதன்மை பெற்றுள்ளது. சிதம்பரத்தில் முதன்மை இட மாகிய மூலத்தானம் நடராசர் திருவுருவம் கொலுவீற்றிருக்கும் அம்பலமேயாகும். இதனை ஞான சபை, சிற் சபை, பொற்சபை, கனக சபை, சிற்றம்பலம், பொன்னம் பலம் என்றெல்லாம் அன்பர்கள் போற்றி மகிழ்வர் சிதம்பரம் என்னும் ஊர்ப்பெயரே, இந்த அம்பலத்தின் பெயரிலிருந்து வந்ததுதான். அம்பலத்திற்குச் சிதம்பரம் என்ற பெயரும் உண்டு; சித்-அம்பரம்=சிதம்பரம். சித்= ஞானம்=அறிவு; அம்பலம்=ஆகாசம்=வெளி. எனவே. சிதம்பரம் என்றால். ஞான ஆகாசம் =அறிவு வெளி என்பது பொருளாம்.

மன்று:

அம்பலம், சபை என வழங்குதல் போலவே, மன்றம் என வழங்குதலும் இலக்கியங்களில் பெருவரவிற்றாம். நடராசர் மன்றுள் ஆடுவதால் மன்றாடி; மன்றுமன்று-