பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

உழைப்பினால் மேன்மேலும் தமிழ்ப் புலமையை வளர்த்து வளமுடைய தாக்கிக் கொண்டார். இருபது வயதிலேயே எப்பொருள் பற்றியும் எடுத்த எடுப்பில் செய்யுள் இயற்றும் திறன் பெற்றார். நாளடைவில் சிறந்த நூற்கள் பல இயற்றிப் பீடும் பெருமையும் உற்றார். இவரது பெரும் புலமைத் திறமறிந்த பெரியோர் பலர் இவரது நட்பை நாடிப் பெற்றுப் பலபடப் பாராட்டலாயினர்.

அவைக்களப் புலவர்:

அந்த நாளில் புதுவையில் 'லூய் ஞானப்பிரகாச முதலியார்’ என்னும் மாபெருஞ் செல்வர், அருங்கலை ஆர்வலராயும் வரையாது வழங்கும் வள்ளலாயும் திகழ்ந்தார் அவர்தம் அவைக்களப் புலவராய்ப் பிள்ளையவர்கள் வீற்றிருந்து பெருமை செய்தார். முதலியாரும் அவரிடம் வரும் அன்பர்களும் புலவரின் நாநலமும் பாநலமும் பெற்றுத் துய்த்து மகிழ்ந்தனர்.

மாணாக்கர்கள்:

பெரும் புலவர் பிள்ளையவர்களிடம் கல்வி பயின்றோர் கணக்கிலர். அவர்களுள். பங்காரு பத்தர், இராமாநுசச் செட்டியார், துரைசாமி முதலியார், வேங்கடாசல நாய்க்கர் கனக. சுப்புரத்தினம் என்னும் பாரதிதாசன் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். பிள்ளையவர்களின் மாணாக்கர் ஒவ்வொருவரும் பெரும் புலவராய்த் திகழ்ந்து பாக்கள் பலவும் நூல்கள் பலவும் இயற்றியும், இதழ்கள் நடத்தியும், கழகங்கள் கண்டும் சிறந்திருந்தமையைப் பலரும் அறிவர். ‘தாய் பத்தடி தாண்டினால், குட்டி பதினாறடி தாண்டும்’ என்னும் பழமொழியின் உண்மையைப் பாரதி தாசன் மெய்ப்பித்த வரலாறு நாடறிந்த செய்தி.