பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82


பண்டைக் காலத்தில் உலக மொழிகள் பலவற்றிலும் இயற்றப் பெற்ற கற்பனை கலந்த-அல்லது-முற்றிலும் கற்பனையான புராண-இதிகாச-காவியங்கள் எல்லாம் வரலாறாகவே கருதப்பட்டு வந்தமை ஈண்டு நினைவு கொள்ளத் தக்கது. பண்டைக் காலத்தில் என்று என்ன? பதினெட்டு-பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலும் கூட, தமிழில் ஊருக்கு ஒரு புராணம் எழுதப்பட்டது. இந்தக் கற்பனைப் புராணங்கள் எல்லாம் வரலாறு போலவே தோற்ற மளிக்கின்றன. இவ்வாறாக அன்று தொட்டு இன்றுவரை, இலக்கியங்கள் வரலாறு போலவும், வரலாறுகள் இலக்கியங்கள் போலவும் தலைதடுமாறிக் காட்சி யளிக்கலாயின.

முதலில் இலக்கியத்திற்கும் வரலாற்றிற்கும் இடையே உள்ள வேறுபாட்டைச் சுட்டியறிந்து, இரண்டிற்கும் உரிய சரியான இலக்கணத்தை வரையறை செய்ய வேண்டும். இஃது ஓரளவு அரிய செயலே!

ஒரு சிறிதும் கற்பனை கலவாது-நடந்ததை நடந்த படி-உள்ளதை உள்ள படி-அப்படியே அளிப்பது வரலாறாகும். நடவாததை நடந்ததாகவோ, நடந்ததையேகூட இடையிடையே கற்பனை கலந்தோ தருவது இலக்கியம்; அதாவது, இது ஒருவகை இலக்கியம். வரலாற்றாசிரியன் எந்தச் சார்பும் இன்றி, விழிப்புடன் நிகழ்ச்சிகளைத் துல்லியமாகத் தரக் கடமைப்பட்டுள்ளான். அவன், நிகழ்ச்சிகட்கு ஒரு சார்பு பற்றி ஏதேனும் ஒரு சாயம் பூசத் தொடங்குவானேயாயின், அவனது எழுத்து, வரலாறு என்னும் தகுதிக்கு உரிய தாகாமல், கற்பனை இலக்கியம் எனப் பெயர் பெற்றுவிடும். இந்த அடிப்படை உண்மைகளையெல்லாம் கருத்தில் கொண்டு, இலக்கியத்தில் வரலாற்றுக் குறிப்புகள் என்னும் தலைப்பினை ஆராய வேண்டும்.