பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

கருவில் வளரும் குழந்தை

மாறுகிறது. அந்த அண்டமும் அந்த விந்தணுவுமே அற்புதமான குழந்தையாக உருவெடுப்பதற்குக் காரணமாகின்றன.

முன்னால் மெதுவாக ஊர்ந்து சென்றுகொண்டு, உயிரற்றதுபோலக் காணப்பட்ட அண்டம் விந்தணுப் புகுந்ததும் ஏதோ மின்னல் பாய்ந்ததுபோல புதிய வேகமும் சக்தியும் பெற்றுப் பலவிதமான மாறுதலடையத் தொடங்குகின்றது.

லட்சக்கணக்கான விந்தணுக்கள் ஓடிவந்தனவல்லவா? அவற்றில் பல பாதி வழியிலேயே சக்தியிழந்து உயிரற்று போகின்றன. மீதியுள்ளவற்றிலும் ஒன்றுதான் அண்டக் கோட்டையை வெற்றியுடன் பிடிக்கின்றது. விந்தணுவுக்குச் சாதாரணமாக ஒரு வாரம் வரையில் இந்த சக்தியிருக்கும். அதற்குள் அண்டத்தை அடையாவிடில் அது பலமிழந்து நசித்துப் போகும்.

விந்தணு முன்னேறிச் செல்வதில் பெண் குறி உறுப்புக்களும் ஓரளவிற்கு உதவி செய்கின்றன. கருப்பையிலும் அண்டக் குழாயிலும் அமைந்துள்ள தசை நார்கள் மெதுவாகச் சுருங்கியும் விரிந்தும் விந்தணுவை முன் செல்லச் செய்கின்றன. அப்படியிருந்தும் சில சமயங்களிலே விந்தணுக்களில் ஒன்று கூட அண்டத்தைச் சந்திக்காமல் போவதுண்டு. அவ்வாறானால் அண்டம் சில காலத்திற்குக் கருப்பையில் தங்கி நலிந்து பயனற்றுப் போகிறது.

அவ்வாறு நசித்துப் போன அண்டமும் விந்தணுக்களும் வெளியே கடத்தப்பட்டுவிடுகின்றன.