பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பக்குவமடைந்த விந்தணுவும் அண்டமும்

17

பிறகு நிறக்கோல்கள் ஒவ்வொன்றும் நீளப்பாங்கில் இரண்டாகப் பிளவுபட்டுப் பழையபடி 24 ஜோடிகளாய்விடுகின்றன. நிறக்கோல்களுக்கு இவ்வாறு பெருகும் சக்தியுண்டு. அதற்கு இரட்டித்தல் என்று பெயர். இவ்வாறு இரட்டித்த ஜோடிகள் ஒவ்வொன்றும் மறுபடியும் தனித் தனியாகப் பிரிகின்றன. அதுவே இரண்டாம் பிரிவு. இப்பிரிவின் பின் விந்தணு ஒவ்வொன்றிலும் 24 நிறக்கோல்களே இருக்கும். இவ்வாறு உண்டாகிய விந்தனுக்களே முதிர்ச்சியடைந்தவை.

விந்தணுவைப் போலவே அண்டமும் முதலில் இரண்டாகப் பிரிந்து, பிறகு இரட்டித்து அதன்பின் நான்காகப் பிரிந்து, முதிர்ச்சி பெறுகின்றது. ஆனால் இவ்வாறு உண்டாகிய நான்கில் ஒன்றுதான் செம்மையாக வளர்ந்து கருக்கொள்வதற்குத் தக்கதாக இருக்கின்றது; மற்ற மூன்றும் வளர்ச்சியின்றி நசித்துப் போகின்றன.

மேலே காட்டியபடி முதிர்ச்சி பெற்ற விந்தணுவும், அண்டமுமே வெளியில் வருகின்றன. அவை ஒவ்வொன்றிலும் 24 நிறக்கோல்களேயிருக்கும்.

இதிலிருந்து அண்டத்தினுள்ளே விந்தணுவொன்று பாய்ந்து கருவாகும்போது அதிலே 24 ஜோடி நிறக்கோல்கள்தானிருக்கும் என்பதை அறிந்துகொள்ளலாம்.