பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

கருவில் வளரும் குழந்தை

பிழம்பாகின்றன. நிறங் காரணமாக அப்பிழம்பிற்கு மஞ்சலரி (Corpus luteum) என்று பெயர் ஏற்பட்டிருக்கிறது.

அண்டம் கருவாக மாறாவிடில் இம் மஞ்சலரி மறைந்துபோகும். ஆனால் அண்டம் கருவாக மாறிவிட்டால் இது செவிலித்தாயாக இருந்து அதற்கு உதவத் தொடங்குகிறது. அப்பொழுது அது ஒரு சுரப்பியைப்போல வேலை செய்யத் தொடங்கும். அது புதிதாகப் பல பொருள்களை உண்டாக்கிக் கருவுற்ற மங்கையின் ரத்தத்தில் சேர்த்து அவளுடைய உடம்பில் பல மாறுதல்களைச் செய்கிறது. கருவை ஏற்று வளர்ப்பதற்காகக் கருப்பையின் உட்புறச் சுவர்களைத் தயார் செய்கிறது. தனங்களிலே பால் சுரக்கச் செய்கிறது. மஞ்சலரியைப் போலவே வேறு பல சுரப்பிகள் கருவடைந்த காலத்தில் பல திறப்பட்ட கடமைகளைச் செய்து கருவின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உதவுகின்றன. இவற்றிலெல்லாம் மஞ்சலரியே முக்கியமானது.

கருப்பை சாதாரணமாக மாதத்திற்கொரு முறை தன்னைச் சுத்தம் செய்துகொள்ளவே விரும்பும். அந்தச் சமயத்தில் அது சுருங்கி நெளியத் தொடங்குகிறது. அவ்வாறு நெளிவதால் கருவுண்டாகாத காலத்தில் அதன் உட்புறச் சுவர் சிதைந்து சூதகத்தோடு வெளிப்பட்டுவிடும். ஆனால் கருவடைந்த காலத்தில் கருப்பை அவ்வாறு சுருங்கி நெளிந்து கருவிற்குப் பங்கம் ஏற்படாமல் செய்வது மஞ்சலரியின் வேலையே யாகும்.