பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

கருவில் வளரும் குழந்தை

அந்தப் பூங்குஞ்சு இப்பொழுது தானே தனக்கு வேண்டிய பிராணவாயுவைச் சேகரித்துக்கொள்ள வேண்டும். தனது உணவைத் தானே சீரணித்துக் கொள்ளவேண்டும். தனது உடம்பின் வெப்பத்தையும், குளிர்ச்சியையும் தானே அளவு படுத்திக் கொள்ளவேண்டும். இப்படி எத்தனையோ செயல்கள். சுவாசப் பையும், சீரணக் கருவிகளும் வேலை செய்யத் தொடங்குகின்றன. குழந்தை பிறந்ததும் அழுகின்றதல்லவா ? இந்த அழுகைக்குக் காரணம் முதலில் வெளிவிடுகின்ற மூச்சுத்தான். மூச்சு வெளி வரும் ஒலியே அழுகையாகக் கேட்கிறது.

குழந்தை பிறந்த சிறிது நேரத்திற்கெல்லாம் சிறுநீர்ப் பையில் சேர்ந்திருந்த மூத்திரம் வெளிப்படுகிறது. சென்ற ஆறு மாதங்களாகக் கருவின் குடலில் சேர்ந்துகொண்டிருந்த கரும் பச்சையான கழிவுப் பொருளும் வெளிவந்துவிடுகிறது.

குழந்தையின் தலையிலுள்ள எலும்புகள் நன்றாகப் பொருந்தாமல் இருக்கின்றன. பிரசவத்திற்கு இது ஒரு வகையில் பெரிய உதவி. குழந்தையின் தலையைத் தொட்டுப் பார்த்தால் ஆறு மென்மையான பாகங்கள் தென்படும். அங்கெல்லாம் இனி மேல்தான் எலும்பு வளர்ந்து கூட வேண்டும்.

பிறக்கும்போதே குழந்தையின் எல்லா உறுப்புக்களும் முழு வளர்ச்சியடைந்திருப்பதில்லை. அவை செய்யவேண்டிய கடமைகளும் உடனே முழு வேகத்தோடு தொடங்குவதுமில்லை. காலப் போக்கிலே இவையெல்லாம் ஏற்படவேண்டும்.