பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6


சுரங்க வழி

பொழுது புலர்ந்தது.

ஞானபண்டிதன் துயில் கலைந்து எழுந்ததுமே, தனக்கு அன்றைக்கு உள்ள முக்கியமான கடமையைப்பற்றிய நினைப்பு அவனை ஆட்கொண்டது. காத்திருக்கும் கடனுணர்வு அவனது இதழ்க் கரைகளிலே பூச்சிரிப்பை விளையாடச் செய்தது. அவன் எழுந்தான். காலைக் கடன்களை முடித்துக்கொண்டான் : குளியல், காலைப் பலகாரம் - எல்லாம் முடிந்தன.

தந்தையிடம் சென்று அன்றைய தினம் தான் சந்திக்க வேண்டிய அலுவல்களைப் பற்றிப் பேச விழைந்தான். ஆகவே, அவன் மாடிக்கு விரைந்தான்.

“அப்பா !...” என்று குரல் கொடுத்துக்கொண்டே உள்ளே அவரது அறையில் அடி பிரித்து வைத்தான்.

பெரியவரைக் காணவில்லை.

படுக்கை காலியாக இருந்தது.

மீண்டும் அழைத்தான் அவன்.

நாலு பக்கங்களிலும் சுற்றிச் சுற்றிப் பார்த்தான்.

கடைசியில், ஏதோ கதவு திறக்கப்படுவது போல ஒரு மெல்லிய சத்தம் கேட்டது.

அவன் திரும்பினான்.

பூமியின் அடியிலிருந்து சுரங்க வழிமூலம் மேலே ஏறி வந்து நின்றார் சோமசேகர். அவர் பொத்தானை அழுத்தி, அவ்வழியை மூடினார்.

“தம்பி, ரொம்ப நேரமாச்சா நீ வந்து?” என்று கலவரம் துளியும் தெரியாமல் அவனைப் பார்த்துக் கேட்டார்.

“இல்லைங்க, இப்பதான் வந்தேன். உங்களைக் காணாமல் பதைச்சுப் போயிட்டேன் அப்பா !” என்றான் அவன்.

அவர் சிரித்துக்கொண்டார்.