பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102


ஞானபண்டிதன் ஒரு வகைத் துடிப்பும் பதட்டமும் கொண்டு எழுந்தான். சிவப்பு ரிப்பன் அடையாளம் வைத்திருந்த பாரதி பாடலை மீண்டும் புரட்டினான்.

பெண்மைக்கு வாழ்த்துத் தெரிவித்துப் பாடுகிறான் பாவலன் :

“வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா ;
    மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள் ;
கலிய ழிப்பது பெண்க ளறமடா ;

    கைகள் கோத்துக் களித்துகின் றாடுவோம் !”

பாடலின் வரிகளை உதடுகளில் உறவாட விட்ட வண்ணம் எழுந்து பீரோவைத் திறந்தான். ‘லுங்கி’ ஒன்றை எடுத்து உடுத்துக்கொண்டான். ‘கூலிங்க்ளாஸ்’ அணிந்துகொண்டான். அப்பாவிடம் சொல்லிக்கொண்ட பின், அவன் புறப்பட்டான் தொழிற்சாலை வண்டி அவனுக்குக் கை கொடுத்தது.

அதே இடத்தை – நேற்று இரவு அடைந்த அதே இடத்தை அடைந்தான் ஞானபண்டிதன். தமிழ்ச் சாதிக்காக தன்னால் இயன்ற பணியினை அணிலாக நின்று செய்ய ஒரு வாய்ப்புக் கிடைத்ததே என்று அவன் உள்ளூர பெருமையும் பெருமிதமும் அடைந்தான்.

நேர் வழியாகப் படியேறி மாடி முகப்பில் வந்து நின்றான் இளைஞன்.

தெரு விளக்குகள் மங்கலாக எரிந்தன.

அப்போது, உள்ளே காரசாரமான விவாதம் அரங்கேறிக் கொண்டிருந்தது.

மறைந்து நின்று ஞானபண்டிதன் நடப்பைக் கேட்டறிந்தான். அதுவே விவேகமானதாகவும் தோன்றிற்று.

“அப்படின்னா, உன் முடிவுதான் என்ன ?” என்று கர்ஜனை செய்தான் முரடன் செங்கோடன். முறுக்கு மீசையை லாகவமாக முறுக்கிவிட்டான்.

பூவழகி அதே வைராக்கியச் சிரிப்புடன் – வீரத் தமிழச்சியின் கம்பீரப் பார்வையுடன் நிமிர்ந்து பார்த்தாள். “நீங்க அந்தப் பணக்காரன் கிட்டே என்னைப் பலி கொடுக்க நினைக்கிறது இந்த ஜென்மத்திலே நடக்கவே நடக்காது ! ஆமா, சொல்லிப்பிட்டேன் !”