பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

ரெளடி செங்கோடன் பேசினான்! பெரியவர்தான் பேசுகிறார் என்று நம்பியே பேசியிருக்க வேண்டும் !

“உங்க ஞானபண்டிதன் — ஆமாம், நீங்க உங்க மகனின்னு பரவலா செஞ்சிக்கிட்டு வருகிற ஞானபண்டிதன் என்கிட்டவே வாலாட்டத் தலைப்பட்டிருக்கான் ! எனக்குக் காலமெல்லாம் கட்டுப்பட்டுக் கெடக்கிறதுக்குக் கடமைப்பட்ட ஒரு பொட்டை நாயைத் தன்னோட கைக்குள்ளாற போட்டுக்க பார்க்கிறான். சொல்லிவையுங்க. அவன் வாயைக் கட்டாமப் போனீங்கன்னா, அப்பாலே உங்களைப் பத்தி ஊர் உலகத்துக்குக் சொல்லுறத்துக்காக நான் என் வாயைத் திறந்துப்பிடுவேன் !... ஏதோ இந்த ஐஞ்சு வருஷமாய் என்கிட்டேயிருந்து உங்களாலே தப்ப முடியலே. ஆனா, அதுக்கு முந்தி இருபது வருஷத்துக்குக் கிட்டே நீங்க என் பார்வையிலேருந்தே தப்பிச்சிட்ட ஆளான ஆளாச்சே !... சரி... எனக்கு டியூட்டிக்கு நேரமாகுது !... ஜாக்கிரதை !... மாமூல் பணம் முதல் தேதி ரெடியாக இருக்கோணும் சார் !”

செங்கோடன் குரலில்தான் எவ்வளவு ஆக்ரோஷம் !... செங்கோடன் ‘டக்’கென்று ‘ரிஸீவரை’ வைத்துவிட்டான். பெரியவரிடமிருந்து மறுமொழி - உத்தாரம் எதுவும் அவனுக்குத் தேவை இல்லையோ ?

முன் ஒரு முறை தொலைபேசியில் கேட்ட குரல் - சோமசேகருடன் தான் ரகசியம் ஏதோ பேச வேண்டுமென்பதாகச் சொல்லி இணைப்பைத் துண்டித்துவிட்ட அதே குரல், இந்தச் சொங்கோடனுடையதே என்ற உண்மையையும் அவனால் அது தருணம் நிர்ணயம் செய்துவிடவும் முடிந்தது.

அன்றிரவு ஞானபண்டிதனுக்கு மகாசிவராத்திரி !