பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18


“அம்மா ! அம்மா !...”

‘ஓ.கே’ சொல்லிவிட்டாள் குழலி என்பதாகப் பூவழகி வந்து ஞானபண்டிதனிடம் அறிவித்தாள், மட்டற்ற மகிழ்ச்சியோடு.

“நான் எற்கனவே எதிர்பார்த்ததுதான் ,” என்று ஒரு மடக்கு மடக்கினான் ஞானபண்டிதன்.

பூவழகி ஒசிந்து விலகி, ஒயில் மாறாமல் சிரித்தாள். புது தில்லியிலிருந்து வாங்கி வந்திருந்த அழகிய நெக்லஸ் அவளுக்குத் தூக்கலாகவே இருந்தது. சிவப்பு ரோஜாவுக்கு நகை பூட்டி அழகு பார்த்தால் எப்படி இருக்கும் !...

“கல்யாணப் பெண்ணுக்கு இஷ்டம் என்றால், எனக்கும் சரிதான்!” என்றார் செந்தில் விலாசத்தின் அதிபர். “எல்லாம் செந்தில் அருள் !” என்று மெய் மறந்து செப்பினார்.

ஞாயிற்றுக்கிழமை ஆனதால் எல்லாருமே ஓய்வாகவும் உணர்வுடனும் அமைதியாகவும் காணப்பட்டார்கள்.

பலகாரம் முடிந்து பேச்சு நடந்தது.

பெண்கள் இருந்த பகுதியை விட்டு, பெரியவர் சோமசேகரும் ஞானபண்டிதனும் தனியே வந்து மாடியை அடைந்தார்கள்.

“சமூக அந்தஸ்து பெற்றவர்தான் மாப்பிள்ளை. அதிலே துளிகூடச் சந்தேகம் இல்லை. ஆனால் பணம்தான்...” என்று இழுத்தார் பெரியவர்.

“நீங்க சம்பாதித்து இருக்கிற சொத்திலே பாதி நாளைக்கே தங்கச்சியைத்தானே சேரப்போகுது ! அப்புறம் தங்கச்சி குழலியின் புருஷன் ஒரு பணக்காரர்தானே அப்பா !...” என்றான் ஞானபண்டிதன்.