உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

“கஷ்டத்தை அனுபவித்துப் பழகாதவங்கதான் அப்படிச் சொல்வாங்க” என்று மெய்யுணர்வைத் துல்லிதமாகக் கண்டு பிடித்த பாங்கில் பேசினான் ரிக்ஷாக்காரன்.

“அப்படின்னா ! ஊழ்வினை - விதி என்கிறதெல்லாம் பொய் தானோ? ”

ரிக்ஷாக்காரன் அவனையே விழித்து நோக்கினான். “அதெல்லாம் இந்த ஏழைக்குப் புரியாதுங்க, அண்ணாச்சி !.... நான் நிதமும் பகவானை மனசுலே நினைச்சுக் கும்பிட்டிட்டுத்தான் காலம்பற சாயா சாப்பிடுவேன். அப்படியே போன தை மாசம் வரைக்கும் இருந்தேன். அப்போதான், என்னோட பெண்சாதி தெய்வானை ஒரு ஆம்பளைப் பிள்ளையைப் பெத்துப் போட்டுப் பிட்டு கண்ணை மூடிடுச்சுங்க !... அப்படின்னா, நான் கும்பிட்டதெல்லாம் அர்த்தமில்லாமப் போச்சின்னுதானுங்களே அர்த்தம் அண்ணாச்சி! ... உங்க கஷ்டம் கவலை, எல்லாத்தையும், என்னாலே அனுபவபூர்வமாய்ப் புரிஞ்சுக்கிட முடிஞ்சுதுங்க !” என்று குரல் கம்மச் சொன்னன்.

“ஐயையோ, பாவமே!” என்று அதிர்ச்சியடைந்தான் சிவஞானம். ‘உசும்ப’த் தொடங்கிய குழவியை மெள்ளத் தட்டிக்கொடுத்தான்; மூக்குப்பற்றைப் பற்றுக்கொண்டு துடைத்தான். மதலை அழும்பு பண்ணி விடவில்லை.

குழந்தை திடுதிப்பென்று, “...ம்..மா...அ.ம்...மா !” என்று குரல் முழங்கத் தொடங்கியது. நல்ல காலமாக அது அழுது வைக்கவில்லை !

“அட பாழும் கடவுளே ” என்று குறைப்பட்டான் ரிக்ஷாக்காரன், துடிதுடிப்புடன்! குழந்தையைத் தட்டிக் கொடுத்து உறங்க வைத்தான் சிவஞானம். தொண்டையைக் கனைத்துக்கொண்டு பேசலானான்:

நாம பட்ட கஷ்டத்திலே தெய்வத்தை நிந்தனை செய்யறோம். அது அவ்வளவு சரின்னு எனக்குப் படல்லே !... என் சம்சாரம் மல்லிகா காய்ச்சல் கண்டுபடுத்தபடுக்கையாய்க் கிடந்த மூணு நாளிலே மூணு கோடி தடவை பகவான தோத்திரம் செஞ்சிருப்பேன் !...கடைசியிலே எனக்கு லவிதம் இல்லை. அவள் கண்ணை முடிப்பிட்டாள். ஆனா, தெய்வம் கண்ணை மூடிட்டதாய் நான் நினைக்கத் துணியலே !...அப்படி