34
சிந்தனைகள் என்னுள் அலை பாய்ந்து எழுந்துவிட்டன ! நாணயத்தின் இரு புறங்களைப் போல, மனத்தின் இரு பக்கத்து நினைவுகள் என்னை இவ்வாறு ஏன் அலைக்கழிக்க வேண்டும்? ... ஈசனே... என் ராஜா எனக்குச் சுமையே இல்லை !... என் தெய்வத்தைக் காக்க வேண்டுமென்ற விரதம்தானே என்னை இந்நேரம் வரை உயிருடன் வைத்திருக்கிறது !... தெய்வமே ! என்னைக் காப்பாற்று ! மல்லி, உன், தெய்வத்தை——உன் ராஜாவைக் காப்பாற்றிக் கொடு !... தெய்வமாகி நிற்பவளல்லவா நீ !” என்று வாய்விட்டுப் புலம்பினான் சிவஞானம்.
நழுவி ஒடிய வினாடிகள் சிலவற்றிற்கு முன்னம் அவனுடைய மனப்பந்தலில் ஒயிலாடி, எழில் காட்டித் தோன்றிய மல்லிகா இப்போதும் தோன்றினாள். மனப்பந்தலில் தோன்றிய அவள், மணப்பந்தலில் காட்டிய கோலத்தை ஏந்தித் திகழ்ந்தாள். “என் உயிரையும் உள்ளத்தையும் உடலையும் உங்கள் வசம் ஒப்படைத்து இந்த அக்கினியைச் சாட்சி வைக்கிறேன், அத்தான்!” என்று சொல்லாமல் சொன்ன அந்தக் கோலம் அவனுள் தோன்றியது. அக்கினியின் தெய்வ சாட்சியமாக அமைத்த அந்த வாழ்விற்கு மற்றுமொரு சாட்சியாகத்தான் ராஜா அமைந்துவிட்டான் !
சிவஞானம் முகத்தைத் துடைத்துக்கொண்டு பக்கவாட்டில் பார்வையைத் திருப்பிப் பார்த்தான்.
குழந்தை உறக்கத்தின் பிடியில் கட்டுண்டிருந்தது.
அவனது உள்ளத்தின் உள்ளம் தன்னுடைய முதல் இரவுக் காட்சியில் போய் அமர்ந்துகொண்டது. “அத்தான், பேழையும் அதன் மூடியும் போல, நீங்களும் நானும் விதிவசத்தால் ஒன்று கூடியிருக்கோம் ; உங்க மல்லியை என்றென்றும் நீங்க மறந்திட மாட்டீங்களே, அத்தான்?” என்று கேட்டாளே மல்லிகா ? ஏன் அப்படிக் கேட்டாள்? விதியின் கேள்வியா அது? இல்லை, வினை விடுத்த வினாச்சரமா அது?
அவன் விம்மினான். “மல்லி, கதைகளிலேயும் சினிமாக்களிலேயும் காதல், அப்படி இப்படி என்று வரும். ஆனால், நீயும் நானும் முதன் முதலாகச் சந்திச்சு, அந்தச் சந்திப்பின் மூலமே நம் காதலைப் பிறப்பித்துக்கிட்டோம். அந்த வகையிலே இந்த