பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11.


“ம் ...மா !...”

தெய்வங்களுக்குச் சோதனைகள்தாம் விளையாட்டு என்றால், அப்பால், அந்த விளயாட்டுக்கு மகிமை ஏது ?

விஜயா அலட்டியதும், 'என்னவோ ஏதோ'வென்று பதட்டத்துடன், பயத்துடன், வேதனையுடன் தலையைக் குனிந்து பார்வையிட்டான் சிவஞானம். -

குழந்தை ராஜாவின் முகத்தில் சலனம் எதுவும் இன்னமும் ஏற்படவில்லேயே !

மல்லிகா ! என் அன்புத் தெய்வமே நம்ம ராஜாவுக்கு புத்துயிர் கொடு, மல்லி !...” .

அவன் மனம் உருகி வழிந்தது.

மறு இமைப்பிற்குள், குழந்தை தும்மியது !...

உடனே, குழந்தையின் முகத்தைத் தன் சேலைத் தலைப்பால் துடைத்தாள் விஜயா. காற்றை விடும்படி எல்லோரையும் கெஞ்சினாள். காற்று நன்றாக வீசியது, ராஜாவின் பால் முகத்தில், பால் முகம் சலனம் காட்டத் தொடங்கியது. அல்லிப் பூ விழிகள் அலர்ந்தன. இதழ்கள் விரிந்தன. சுற்றிச் சூழப் பார்த்ததும், குழந்தை அலறியது. "அத்தான்! இனி பயமில்லை !...” என்று சொல்லி, ராஜாவைத் தாலாட்டினாள் விஜயா. கிலுகிலுப்பையைக் குலுக்கினாள்.

குழந்தையின் அழுகை அடங்கியது. அதற்கு முத்தங்கள் ஈந்தாள் விஜயா. அவளேயே வெறிக்க வெறிக்கப் பார்த்தது குழந்தை. பிறகு, அவளைப் பார்த்து, பழக்கப்பட்ட பாங்கிலே புன்முறுவல் செய்தது. "ஒரு நொடிக்குள்ளே எங்களையெல்லாம் சாகடிக்கப் பார்த்தியேடா, ராஜா ?" என்று தேம்பினாள்.

சிவஞானம் மெய்ம்மறந்து கண்ணீரும் கம்பலையுமாக நின்றான். அவன் கரங்கள் கூப்பியவை கூப்பியபடியே இருந்தன.