120
கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி
"ஸ்வஸ்தி ஸ்ரீ கோ. இராஜகேசரி வன்மரான திருபுவனசக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க தேவர்க்கு யாண்டு நாற்பத்து மூன்று, ஜயங் கொண்ட சோழமண்டலத்து எயிற்கோட்டத்து எயில் நாட்டுத் திருவத்தியூராழ்வார்க்குச் சோழமண்டலத்துக் குலோத்துங்க சோழவளநாட்டுத் திரு நறையூர்காட்டு வண்டாழஞ் சேரியுடையான் வேளான் கருணாகரனான தொண்டைமானார் தேவியார் அழகிய மணவாளனி மண்டையாழ்வார் வைத்த திரு நுந்தா விளக்கு"[1]
இதில் குறிப்பிடப் பெற்றுள்ள 'கருணாகரனரான தொண்டைமானார்' தான் கருணாகரத் தொண்டைமான் என்பது திரு. அய்யங்கார் அவர்களின் கருத்தாகும். அமைச்சர் குலம் போன்ற உயர்பதவியிலுள்ள மகளிரை ஆழ்வார் என்று வழங்குதல் அக்காலத்து வழக்கு என்பதற்கும் கல்வெட்டுகளிவிருந்து சான்றுகளை எடுத்துக் காட்டுகிறார்கள்.[2] அவ் வண்டுவாஞ்சேரி தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் தாலூகாவின் தென்கிழக்கில் திருநறையூராகிய நாச்சியார் கோவிலுக்கும் திருச்சேறைக்கும் இடையில் உள்ளது.
கருணாகரத் தொண்டைமானுக்குத் தமையன் ஒருவன் இருந்தான் என்றும், அவன் கருணாகரன் கலிங்கத்தின் மேல் தண்டெடுத்துச் சென்ற பொழுது துணைப்படைத் தலைவனாகச் சென்றான் என்றும் சயங்கொண்டார் குறிப்பிடுகின்றார்.