உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கருணாகரத் தொண்டைமான்

121


தொண்டை யர்க்கரசு முன்வ ருஞ்சுரவி
துங்க வெள்விடை உயர்த்த கோன்
வண்டை யர்க்கரசு பல்ல வர்க்கரசு
மால்க ளிற்றின் மிசை கொள்ளவே[1]

என்ற தாழிசையால் இவற்றை அறியலாம். தமையன் காஞ்சியிலிருந்து தொண்டைநாடு முழுவதும் ஆண்டு கொண்டிருந்ததால் 'பல்லவர்க் கரசு’ என்று குறிப்பிடப் பெற்றுள்ளான்.குலோத்துங்கனுக்குப் படைத் தலைவ னாய் அமைந்த கருணாகரன் வண்டை நகரின் கண் இருந்து சோழநாட்டின் ஒரு பகுதியை ஆட்சி செய்து வந்ததால் 'வண்டையர்க்கரசு' என்று சுட்டப் பெறுகின்றான். தம்பியைப் போலவே தமையனும் பெருவேந்தனை குலோத்துங்கனுக்கு உட்பட்ட பல சிற்றரசர்களுள் ஒருவனாய் நெருங்கிய நண்பனாக இருந்து வந்தான் என்று யூகம் செய்ய வேண்டியுள்ளது. இந்நட்புக் காரணமாகவே குலோத்துங்கன் பாலாற்றங்கரையில் பரி வேட்டையாடிய பின் தன் பரிவாரங்களுடன் காஞ்சியில் வந்து தங்கியிருந்தனன் என்று கருத இடம் உண்டு. ஒரு தாய்வயிற்றுப் பிறந்த சகோதரர்களுள் மூத்தோனிருப்பவும் இளையோன் அரசியலில் தலைமை வகிக்க நேர்ந்தது,

ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக வென்னாது அவருள்
அறிவுடை யோனாறு அரசுஞ் செல்லும்[2]

என்ற ஆன்றோர் வாக்குப்படி ஒக்குமென்றே கொள்ள வேண்டும்.


  1. தாழிசை-364
  2. புறம்-283