பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



62

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


என்று குறிக்கப் பெறுகின்றது. இன்னும் இவன் அக்காலத்தில் ஆண்ட ஐந்து பாண்டிய அரசர்களையும் வென்றான்.[1] பாண்டிய நாட்டின் மீது படையெடுத்த பொழுது முத்துக்கள் மிகுதியாகக் கிடைக்கும் மன்னார் குடாக் கடலைச் சார்ந்த நாட்டையும், பொதியிற் கூற்றத்தையும், கன்னியாகுமரியையும், கோட்டாற்றையும் தனக்கு உரிமையாக்கிக் கொண்டான். இவற்றை மீண்டும் பாண்டியர் கவராதவாறு கோட்டாற்றில் கோட்டாற்று நிலைப்படை என ஒரு படையை ஏற்படுத்தினான்.

முள்ளாறும் கல்லாறும் தென்னர் ஒட
முன்னொருநாள் வாளபயன் முனிந்த போரின்
வெள்ளாறும் கோட்டாறும் புகையான் மூட
வெந்தவனம் இந்தவனம் ஒக்கில் ஒக்கும்[2]

[ஆறு-வழி; தென்னர்-பாண்டியர்; முனிதல்-வெகுளல்; வெள்ளாறு-ஒர் ஆறு; கோட்டாறு-நாகர்கோவில் பகுதி யைச் சேர்ந்த ஓர் ஊர்]

என்ற தமிழிசையில் இச்செய்தி குறிப்பிட்டுள்ளமை காண்க. சேரரையும் வென்று வாகை சூடினான்.[3] சேரனை வெற்றி கொண்டு திருவனந்தபுரத்திற்குத் தெற்கேயுள்ள விழிஞம், காந்தளூர்ச்சாலை என்னும் சேரர் துறைமுகங்களில் இருந்த மரக்கலங் களைச் சிதைத்தழித்த செய்தி,

வேலை கொண்டு விழிஞ மழித்ததும்
சாலை கொண்டதும் தண்டுகொண் டேஅன்றோ?[4]

[சாலை-காந்தளூர்ச்சாலை]

என்ற தாழிசையில் குறிப்பிடப் பெற்றுள்ளது.


  1. தாழிசை-381
  2. தாழிசை-95
  3. தாழிசை-382
  4. தாழிசை-383.