பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வரலாற்றுக் கருவூலம்

63


அக்கால அரசர் இயல்புகள்

அரசர்கள் படைக்கலப் பயிற்சி பெற்ற பின் உடைவாளைத் தம் அரையில் பூண்டிருப்பர். அரசவை யில் அரசு வீற்றிருக்கும் பொழுது அரசன் தன் தேவியுடன் இருத்தல் வழக்கம். குலோத்துங்கன் காஞ்சியில் வீற்றிருந்த செய்தியைக் குறிக்கும் கவிஞர்,

" தேவியர் சேவித் திருக்கவே "[1]

என்று கூறுவதிலிருந்து இதை அறியலாம். அரசனுடைய அணுக்கிமார் நாடகம் நிருத்தம் முதலியவற்றிலும் பாலை, குறிஞ்சி, செவ்வழி, மருதம் என்ற நால்வகைப் பண்களிலும் வல்லோராய் இருப்பர்.[2] அரசவையில் வீணை, யாழ், குழல், மத்தளம் முதலிய இசைக் கருவிகள் இடம் பெற்றிருந்தன.[3] அரசருடைய புகழைப் பாடுவதற்குச் சூதர், மாகதர், மங்கலப் பாடகர், வந்தியர், வைதாளிகர் என்போர் அரசவையில் இருந்தனர்.[4] அரசனுடைய ஆணையைப் பிறருக்கு அறிவிப்பதற்கும் பிறருடைய விருப்பங்களை அரசனுக்குத் தெரிவித்தற்கும் உரிய அதிகாரி ' திருமந்திர ஓலையாள் ' என்ற பெயரைப் பெற்றிருந்தான்.[5]

அரசன் ஒன்று குறித்து வெளிச்செல்லுங்கால் மறையோர்க்குத் தான தருமங்கள் செய்தும் கவி வாணர்க்குப் பரிசளித்தும் புறப்படுவது வழக்கம்[6] பேரரசர் புறப்படுங்கால் சிற்றரசர் சயஒலி முழக்குவர்; மறையவர் மறைகளை மொழிவர்.[7] சங்கு,


  1. தாழிசை-320
  2. தாழிசை-321
  3. தாழிசை-323
  4. தாழிசை-322
  5. தாழிசை-328
  6. தாழிசை-281
  7. தாழிசை-294