பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்பனை ஊற்று

81


அச்சம் ஏற்படுகிறது. அவள் நடந்து வருங்கால் காலில் அணிந்துள்ள சிலம்புகள் ஒலிக்கின்றன. அச் சிலம்பின் குரல் அச்சக்குரல் போல் இருக்கிறது என்று கூறுகிறார் கவிஞர். 'கொங்கையின் பாரம் தாங்கமுடியாது இடைமுறிந்து போகக்கூடும்; நடப்பதை நிறுத்துக” என்று சிலம்புகள் அபயக்குரல் எழுப்பி அம்மங்கையிடம் முறையிடலாயின என்று கவிஞர் கற்பனை நயம் தோன்றக் கூறுகின்றார். இவ்வாறு ஒரு பொருளின் கண் இயல்பாக நிகழும் தன்மையொழியக் கவிஞன் தான் கருதிய வேறொன்றினை அதன் கண் ஏற்றிச் சொல்வதை அணி நூலார் "தற்குறிப்பேற்றம்’ என்று வழங்குவர். அதைப் பின்னர் விரிவாகக் காண்போம்.

மகளிரின் கலவிப்போரை இயல்பாகச் சித்திரிக்கும் சொல்லோவியங்கள் பன்முறை படித்து இன்புறத் தக்கவை.

அளக பாரமிசை அசைய மேகலைகள்
அவிழ ஆபரணம் இவையெலாம்
இளக மாமுலைகள் இணைய றாமல்வரும்
இயல்ந லீர்கடைகள் திறமினோ[1]

கூடும் இளம்பிறையிற் குறுவெயர் முத்துருளக்
கொங்கை வடம்புரளச் செங்கழு நீரளகக்
காடு குலைந்தலையக் கைவளை பூசலிடக்
கலவி விடாமடவீர் கடைதிற மின்திறமின்[2]

[அளகம்-கூந்தல்; மிசை-மேலே ; மேகலை-இடையில் அணிவது; இளக-நெகிழ ; மா.பெரிய இணையறாமல்-ஒன்றோடொன்று உயர்வு தாழ்வின்றி; நலீர்-நல்லீர், பெண்களே; பிறை-நெற்றி; வெயர்-வெயர்வை ; வடம் - மாலை; குலைந்து -கலைந்து ; அலைய-புரள ; பூசல்-ஒலி: கலவி-புணர்ச்சி.]


  1. தாழிசை-53
  2. தாழிசை-62