உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


வந்த எழுத்துத் தொகுதிகளே மீண்டும் வந்து பொருள் வேறுபடுவது மடக்கு என்னும் சொல்லணியின் இலக்கணம். மகளிரிடம் மேற்கொண்ட கலவிப் போரால் அவர்களது இடையணி அப்படியே அணிந்த வண்ணம் இருக்க மேலாடை மட்டிலும் நிலை பெயர்ந்து கிடக்கின்றது; கருணாகரனது போரால் காஞ்சி அழியாதிருக்க, கலிங்க நாடு அழிந்து விட்டது என்ற வேறுபட்ட பொருள் முறையே முதலாவது, இரண்டாவது அடிகளில் வந்துள்ளமை காண்க. இன்னும்,

ஒருக லிங்கமொ ருவன ழித்தநாள்
ஒருக லிங்கமொ ருவரு டுத்ததே[1]

என்ற தாழிசையிலும் 'யமகம்' வந்துள்ளது. கருணாகரன் கலிங்க நாட்டை அழித்த பொழுது கலிங்க வீரர் மேலாடை வீழ்ந்ததையும் கவனியாது உயிர் பிழைக்க ஓடினர் என்பது இதனால் கவிஞர் பெற வைத்த செய்தி.

மனுக்கோட்டம் அழித்தபிரான்
வளவர்பிரான் திருப்புருவத்
தனுக்கோட்டம் நமன்கோட்டம்
பட்டதுசக் கரக்கோட்டம்[2]

என்ற தாழிசை குலோத்துங்கன் சக்கரக்கோட்டத்தை அழித்ததைக் கூறுவது. இதில் திரிபு என்ற சொல்லணி வந்துள்ளது. எல்லா அடிகளிலும் இரண்டாம் எழுத்து முதலிய பல எழுத்துக்கள் ஒன்றி நின்று பொருள் வேறுபடுவதைத் 'திரிபு'என்று கூறுவர் இலக்கண நூலார். இத்தாழிசையில் முதலடியிலுள்ள மனுக்கோட்டம் இரண்டாம்


  1. தாழிசை 354
  2. தாழிசை - 254