பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103


மீன்கள் வாழும் நீர் நிலைகள் நிறைந்திருக்க, அகன்ற பெரிய பூஞ்சோலை நாற்புறமும் சூழ்ந்து கிடக்க, இடையில், கண்ணையும் கருத்தையும் கவரும் கவின் ஊட்டி, பொன் மலர்க் கொடிகள் சுற்றிக் கிடப்பன போலவும், வெள்ளிப் பறவைகள் வீற்றிருப்பன போலவும் வனையப்பட்ட தூண்களை வரிசை வரிசையாக நாட்டிக் கட்டிய கோமகன் கோவில் கொலு வீற்றிருந்தது.

பாடலியைத் தலைநகராகக் கொண்டு மகதத்தை ஆண்ட மன்னர்கள், மௌரிய குல மன்னர்களுக்கு முன்னரும் சிலர் இருந்தனர். என்றாலும், அன்னார் மரபு மாசுடையது எனக் கூறப்படுதலான், மகத நாடாண்ட முதல் மன்னர் மரபினர் மௌரியரே என்று வரலாற்று நூலாசிரியர்கள் கூறிச் சென்றுள்ளார்கள். மௌரியருக்கு முன். அந்நாடாண்டவர் நந்த குலத்தவராவர். மகத நாடாண்ட மன்னன் ஒருவன் மனைவி, அந்நாட்டு அம்பட்டன் ஒருவன் பால் காதல் கொண்டாள்; அக்கள்ளக் காதலர் இருவரும் தங்கள் காதலுக்குத் தடையாய் இருந்த மன்னனைக் கொன்று விட்டார்கள், மன்னன் மறைந்த பின்னர், அவன் மக்களைக் காக்கும் கடமை மேற் கொண்டுள்ளேன் எனக் கூறிக் கொண்டு, அரசியின் அந்தப்புரத்தை விட்டு, அரசியலில் காலடியிட்ட அரசியின் கள்ளக் காதலன், சின்னாட்களுக்கெல்லாம் மன்னன் மக்களையும், மற்றும் உள்ள மன்னர் குலத்தவரையும் கொன்று விட்டு, மகத நாட்டிற்குத் தானே மன்னன் என மணி மகுடம் சூட்டிக் கொண்டான். தனக்கும் தன் காதலி அரசமாதேவிக்கும் பிறந்த தன் மகனை, மகத நாட்டின் இளங்கோவாக்கி முடி சூட்டி வைத்தான்; இது நிகழ்ந்து கொண்டிருக்குங்கால், அம்மகத நாட்டு மன்னர் மரபில் வந்தான் ஒருவன், முரா என்ற பெயர் உடைய ஓர் இழிகுல மங்கையை மணந்து கொண்டான்; அவர்களுக்கு மகனாகப் பிறந்து சந்திரகுப்தன் எனும் பெயர்