பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134



அவ்விளையேர்ர்க்கு உரிய தகுதிகளை மதித்து, அவர்களிடம் அன்பாய்ப் பழகுதல் வேண்டும்; ஒருவர் பணிந்து நிற்க, மற்றொருவர் அன்பு காட்ட வாழும் இவ்வறம் அதையொட்டி, நண்பர், உறவினர், நல்லற நெறி நிற்கும் துறவிகள் பாலும் தொடர்தல் வேண்டும்; ஓரினத்தைச் சேர்ந்த ஒருவர்க்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்தல் வேண்டும் என்ற பண்பாட்டு நெறியைப் பாரெங்கும் பரப்பினான்.

இவ்விரு பெரும் அறங்களோடு, அசோகன் மேற்கொண்ட மூன்றாவது அறம் வாய்மை. உண்மை உயர்வளிக்கும் என்ற உயர்ந்த அறத்தை அறிந்து, மக்கள் எல்லோரும், எப்பொழுதும் வாய்மையே பேசுதல் வேண்டும் என்று விரும்பினான். அவ்வறத்தை நாட்டு மக்களிடையே வற்புறுத்தினான். அசோகனின் சிறு பாறைக் கல்வெட்டு அரச ஆணை வரிசையுள் இரண்டாவது ஆணை “தாயையும் தந்தையையும் வழிபட வேண்டும்; அதைப் போலவே வாழும் உயிர்களை மதித்துப் பேணுதலும் வேண்டும்; வாய்மையை வழங்குதல் வேண்டும். மக்கள் மேற்கொள்ள வேண்டிய அருள் அறத்தின் உயிர் நாடிகள் இவையே. அதைப் போல்வே, மாணாக்கர் ஆசிரியன்மாரைப் பணிந்து வழிபட வேண்டும்; சுற்றத்தவர் பேணப்படுதல் வேண்டும். இவையே முன்னோர் கண்ட அறமுறைகளாம்; இம்முறை வாழ்நாளை வள்ர்க்கும். நாட்டு மக்கள் இம்முறைப்படியே வாழ்தல் வேண்டும். மதிப்புக்குரிய மன்னன் ஆணை இது” என்று கூறுகிறது.

கொல்லாமை, பணிவுடைமை, வாய்மை போலும் விழுமிய அறங்களோடு, நாட்டில் சமரச நிலை நிலவவும் அசோகன் பெரும்பாடு பட்டான். தன் சமய நெறியைப் போலவே, பிற சமய தெறிகளும், தன்னடக்கம், துர்ய உள்ளம் ஆகிய உயர்ந்த குறிக்கோள் உடையனவே