பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

137


உயர்ந்த வினைகளும், சிறந்த விழாக்களுமாம்” என்று கூறி வழி காட்டியுள்ளான்.

அருளற வழிகளைக் காட்டி, மக்களின் உயிர் வளர்ச்சிக்குத் துணை புரிந்த அசோகன், அவர்களின் உடல் வளர்ச்சியை மறந்தானல்லன். உடலார் அழியின் உயிரார் அழிவர் என்ற உண்மையை உணர்ந்திருந்தமையால், மக்களின் புற நலனுக்கான பற்பல வழிகளை வகுத்திருந்தான்; “படைபோகு பெருவழி போலும் வழிகளின் இருமருங்கும், மக்களுக்கும், மாக்களுக்கும் நிழல் தரும் ஆலமரங்களை வளர்த்தேன். ஆங்காங்கே, சுவை மிக்க காய்களையும் கனிகளையும் தரும் மாமரங்களையும் வளர்த்து வைத்தேன்; இரண்டாயிரம் கெஜத்திற்கு ஒன்றாகக் கிணறுகளை வெட்டி வைத்தேன்; அறச்சாலைகளையும் கட்டி வைத்தேன்; எண்ணற்ற தண்ணீர்ப் பந்தல்களை ஆங்காங்கே அமைத்து, விலங்குகளும், மக்களும் வழி வருத்தம் உணராது வழி கடக்கத் துணை புரிந்தேன்” எனக் கூறும் அசோகன் கல்வெட்டுக்கள், அவன் ஆற்றிய அறப் பணிகளை நாம் அறியக் காட்டுகின்றன.

தம்மைப் பற்றி வருத்தும் நோய்களை வாய் திறந்து கூற மாட்டா விலங்குகளின் நோய் போக, கால்நடை மருத்துவ நிலையங்களை நிறுவிய அசோகன், மக்களின் நோய் போக்கும் மருத்துவ மனைகளையும் கட்டி வைத்தான். அசோகனின் அருள் உள்ளம், அம்மனைகளைத் தன் ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் மட்டும் அமைத்ததில் அமைவுற்றிலது; தன்னோடு நட்புடையராய்த் தனியரசு புரியும் தமிழரசர் நாடுகளிலும், கிரேக்கரின் ஆட்சி, நிலவும் ஆசிய நாடுகளிலும், உடல் நல உறைவிடங்களை எடுப்பித்தான். மருந்தாகிப் பயன்படும் மரம் செடி கொடிகளை ஆங்காங்கே நட்டு வளர்த்தான்; வேண்டிய் மருந்து வகைகளை வெளிநாடுகளிலிருந்து வரவழைத்து அளித்தான்.