பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
29

செய்து தன் நாட்டுத் தூதுவனை சிறை வீடுசெய்து பழி தீர்த்துக் கொண்டது. உதகையின் அழிவு கண்டும் இராசராசன் உள்ளம் அமைதியுற்றிலது. சேரர் படை வலியை அறவே சிதைத்தல் வேண்டும் என்று விரும்பினான். உடனே தென்கடற் கோடியில் இருந்த சேரர் படைத் தளமாகிய விழிஞத்தை வளைத்துக் கொண்டு பெரும் போர் புரிந்து சேரர் படை முழுவதையும் பாழ் செய்தான். அம்மட்டோ தான் பிறந்த சதயத் திருநாள் விழாவையும் சேரநாட்டுத் தலைநகரிலேயே சிறப்புறக் கொண்டாடிவிட்டு, அளவிலாப் பொற்குவியல்களையும், எண்ணிலாக் களிறுகளையும் கைக்கொண்டு தலைநகர் வந்தடைந்தான்.

பெரும் பகைவர்களாகிய பாண்டியனையும் சேரனையும் வென்றடக்கிய பின்னர், இராசராசன் படை பிற சிறு நாடுகள்மீது சென்றது, குடகு என இக்காலத்து வழங்கும் குடமலை நாடே அப்படையின் முதற் குறிக்கோளாய் அமைந்தது. அக்காலை அந்நாட்டைக் கொங்காள்வார் மரபில் வந்த ஒருவன் ஆட்சி புரிந்து கொண்டிருந்தான். குடமலை நாடு புகுத்த சோழர் குலக்குரிசில், அக்கொங்காள்வானைப் பணசோகே எனும் இடத்தில் போரிட்டு வென்றான். வென்ற அந்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை, அப்போரில் ஆற்றல் காட்டிப் போரிட்ட மனிஜா என்ற வீரன்பால் ஒப்படைத்து வெளியேறினான்.

குடகை வெற்றிகொண்ட நம் கோமகன், பின்னர் அந்நாட்டை அடுத்திருந்த கங்கபாடி, நுளம்பபாடி, தடிகைபாடி முதலான சிறு நாடுகள் மீது சென்றான். மைசூர் நாட்டின் அகத்திலும் புறத்திலும் இடம்பெற்றிருந்த இச்சிறு நாடுகளுள், தழைக்காடு எனும் ஊரைத் தலைநகராகக் கொண்ட கங்கபாடி மேலக்கர் ஆட்சிக்குட்பட்டிருந்தது. நுளம்பபாடியில், பல்லவரின் ஒரு கிளையினரான நுளம்பர்கள் ஆட்சிபுரிந்திருந்தனர். தமக்கு அரணளித்து வந்த இராஷ்டிரகூடப் பேரரசு அக்காலை ஆற்றல்