பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
30

குன்றி அடங்கியிருந்தமையால், அச்சிறு நாடுகள் மூன்றும், இராசராசனுக்கு எளிதில் அடி பணிந்துவிட்டன.

வடமேற்குத் திசை நாடுகளில் வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருக்கும்போதே இராசராசன் சிந்தை மற்றொரு திசையில் சென்றிருந்தது. பாண்டியனும் சேரனும் தனக்குப் பணியாது பகைகொண்டு வாழ்ந்தது, அவருக்கு ஈழ நாட்டரசன் அளித்த படைத்துணை வலியால் என்பதை அறிந்து, இராசராசன் அவ்வீழநாட்டான் பால் கடுஞ்சினம் கொண்டிருந்தான். தமிழகத்தில் தன்னை எதிர்த்து நிற்பார் எவரும் இலர் என்ற நிலை ஏற்பட்டவுடனே, இராசராசன், தன் படையை ஈழநாட்டின்மீது போக்கினான். சோழர் பெரும்படை கலம் ஏறிக் கடல் கடந்து ஈழநாட்டு மண்ணில் அடியிட்ட அதே நேரத்தில், ஈழப் படைக்குள்ளாகவே கலகம் தோன்றிற்று; அதையடக்கும் ஆற்றலையும் இழந்துவிட்ட ஈழநாட்டு அரசன், அத்தீவின் தென்கிழக்கு நாட்டிற்கு ஓடிவிட்டான். ஈழ நாட்டில் வடபகுதி எளிதில் சோழர் உடமையாயிற்று. சோழர் படைக்குத் தலைமை தாங்கிச் சென்ற, இராசராசன் மகனாகிய இராசேந்திரன், அவ்வட பகுதிக்கு மும்முடிச் சோழ மண்டலம் எனத் தந்தை பெயரால் பெயரிட்டுப் பொலன்னருவா நகரைத் தலைநகராகக் கொண்டு, சோணாட்டாட்சியை நிலைநாட்டித் தாய்நாடு திரும்பினான்.

ஈழநாட்டில் வெற்றிகண்டு வீடு திரும்பிய சோழர் படைக்கு, வடநாடு செல்லவேண்டிய பணி காத்துக்கிடந்தது. இராசராசனால் வென்று அடக்கப்பட்ட நுளம்பபாடி, அது காறும் மேலைச்சாளுக்கியர் ஆட்சிக்குட்பட்டிருந்தது. தம் ஆட்சிக்குட்பட்ட அந்நாட்டில் சோழர் புலிக்கொடி பறப்பதைச் சாளுக்கிய வேந்தன் வாளா பார்த்துக் கொண்டிருக்க விரும்பினானல்லன்; ஆங்குச் சோழர் ஆட்சியை அகற்றக் காலம் நோக்கிக் காத்திருந்தான். அதை ஒற்றர் மூலம் அறிந்து கொண்ட