பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
51


சோழனின் ஆண் மக்கள் ஐவருள்ளும் நடுப் பிறந்தோன் இவ்விராசேந்திரன் அம்மக்கள் ஐவருள்ளும் நாடாண்ட மக்கள் அவர்; மூவருள்ளும் நடுவில் நிற்போன் இவனே. தன் தந்தை இராசேந்திரனை அடுத்து நாடாண்ட அண்ணன் இராசாதிராசனுக்குப் பெருந்துணையாய் நின்று, ‘தம்பி யுடையான் படைக்கு அஞ்சான்’ என்ற பழமொழிக்கு நல்ல இலக்கியமாய் இருந்து புகழ் பெற்றவன் இவன். தனக்கு இவனாற்றிய துணையின் பெருமையளவை நன்கு அறிந்த இராசா திராசன் தனக்குத் ‘தம்பி துணைச் சோழன்” என்ற ஒரு பெயரைச் சூட்டிக் கொண்டதோடு தொண்டை நாட்டை வளநாடு ஒன்றிற்கும்.அப்பெயரைச் சூட்டி இவனைச் சிறப்பித்துள்ளான் எனில் இவன் அண்ணன் மாட்டுக் கொண்டிருந்த அளப்பரிய அன்பின் பெருமையை என்னவென்பது.

இராசாதிராசன், மேலைச்சாளுக்கிய மன்னன் ஆகவ மல்லனோடு மேற்கொண்ட நாலாவது போரில் அண்ணனோடு உடன் சென்று பெருந்துணை புரிந்து நின்றான் நம் இராசேந்திரன். களிறுமீதமர்ந்து களம்புகுந்த இராசாதிராசன் இறந்தான் என்பதறிந்து செயல் இழந்து சிதறிய சோழர் படைகளை ஒன்று திரட்டி, ஊக்கம் ஊட்டி வெற்றிக்கு வழி செய்தவன் இவனே. இராசாதிராசனைக் கொன்ற சாளுக்கியமன்னனும் படை மறவரும், இவனையும் சூழ்ந்துகொண்டு கடுமபோர் புரிந்தனர் என்றாலும், அவர்கள் அனைவரையும் வென்று அக் களத்தில் வாகை சூடினான்; என்மருக்கும் மேற்பட்ட அவர் படைத்தலைவர்களைக் கொன்றும், ஆகவமல்லனை யும் மற்றுமுள்ள படைத் தலைவர் மூவரையும், களத்தை விட்டுக் கண்காணா இடம் ஒடத் துரத்தியும், சத்துரு பயங்கரன், கரபத்திரன், மூலபத்திரன் என்ற பெயர் சூடிய சாளுக்கியன் பட்டத்து யானைகள் உள்ளிட்ட யானைகள் ஆயிரமும், எண்ணிலாக் குதிரைகளும், ஒட்டகங்களும், மட்டிலாப் பொருள்களும் ஆகிய பெரும் பொருளைக் கவர்ந்தும், சாளுக்கிய குலதேவியர் பலரைச்