பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3. குலோத்துங்கன் கொற்றம்

வடக்கே வேங்கிநாடு முதல், தெற்கே கடல் கடந்த ஈழ நாடு வரை பரவியிருந்த ஒரு பேரரசைக் கட்டிக் காக்கும் பொறுப்பு, கொற்றம் மிக்க குலோத்துங்கனுக்கு அரசியல் சுமையாகத் தோன்றவில்லை; குலோத்துங்கன் மூவேந்தர் குடியில் வந்தவனல்லன்; தமிழ்நாட்டில் பிறந்து, தமிழர்களின் பழக்க வழக்கங்களை மேற்கொண்டு தமிழனாகவே வாழ்ந்தான் எனினும், அவன் தமிழ் நாட்டான் அல்லன்; இக்காரணங்களால், தமிழரசர்களாகிய சேரனும் பாண்டியனும் அவன் ஆட்சித் தலைமையை வெறுக்கத் தலைப்பட்டார்கள். தம் அண்டை நாட்டில் அரசோச்சும் சோழர் தலைமையையே வெறுத்து வந்த ஈழ நாட்டார், நனிமிகச் சேயநாட்டினனாகிய சாளுக்கியன் தலைமை கீழ் வாழ விரும்புவரோ? அவர்கள் உள்ளத்திலும் வெறுப்புணர்வு வளர்ந்துகொண்டிருந்தது. தன் மைத்துனன் அதிராசேந்திரன் இருந்து ஆண்ட அரியணையில், தன் தாயத்தவனும் தன்குலப் பகைவனுமாகிய குலோத்துங்கன் அமர்வதையும், அவன் தலைமையில், வேங்கிநாடும், சேர, சோழ, பாண்டிய நாடுகளும் அடங்கிய ஒரு பேரரசு வருவதையும் மேலைச்சாளுக்கிய விக்கிரமாதித்த மாவீரன் வெறுத்தான்; இத்தகைய சூழ்நிலையில் சோணாட்டு அரசுரிமையை ஏற்றுக்கொண்ட குலோத்துங்கன், எத்தகைய தாக்குதலையும் தாங்கி அழிக்கவல்ல வீரமும் விழிப்புணர்வும் உடையனாய் விளங்கினான். ஆண்மை ஆற்றல்களில்; சோணாட்டு அரியணையில் அமர்ந்து ஆண்ட அரசர்கள் அனைவரினும் குலோத்துங்கன் சிறந்து விளங்கினான் என்றாலும், அக்குல முன்னோர் போல் சென்று தாக்கும் போரில் சிந்தை