பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
78

மற்றொருபகுதி அவன் முன்னோன் சோமேசுவரன். ஆட்சிக்கீழ் இருந்தது; இருவரும் உடன் பிறந்தவர்களேனும் அவர்களிடையே, அக்காலை ஒற்றுமை குலைந்து பகையுணர்வு தலைதூக்கி நின்றது. அஃதறிந்த குலோத்துங்கன் சோமேசுவரனைத் தன் துணைவனாக ஆக்கிக்கொண்டான். “தன் துணை இன்றால்; பகை இரண்டால்; தான் ஒருவன்; இத்துணையாக் கொள்க அவற்றின் ஒன்று” என்ற போர் நெறியுணர்ந்து குலோத்துங்கன் மேறகொண்ட இம்முடிவு கண்டு விக்கிரமாதித்தன் வெஞ்சினம் கொண்டான்; இனியும் காலங்கடத்தின் தனக்குக் கேடாம்; குலோத்துங்கன் வெற்றிக்குத் தானே வாய்ப்பளித்தது போலாம் என உணர்ந்தான்; உடனே, தம்பி துணைவர, ஐந்து ஆண்டுகளாகத் திரட்டி வைத்துள்ள பெரும்படையோடு தென்னாடு நோக்கிப் புறப்பட்டான்.

விக்கிரமாதித்தன், சோழ அரசின் வடவெல்லை நாடாகிய மைசூர் நாட்டுக்குள் புகுந்துவிட்டான் என்பதை அறிந்த குலோத்துங்கன் வடதிசை நோக்கி விரைந்தான்; வாக்களித்தவாறே, விக்கிரமாதித்தனின் முன்னோனாகிய சோமேசுவரன் சோழன் பக்கம் நின்று போரிட்டான், ஹொய்சள எரியங்கன், கடம்பகுல சயகேசி, பாண்டியன் திருபுவன மல்லன், யதுகுல சேஷணன் முதலிய சிற்றரசர்கள் விக்கிரமாதித்தனுக்குத் துணையாக வந்தார்கள். இருதிறப் படையினர்க்கும் போர் தொடங்கிவிட்டது; மைசூர் நாட்டு மண்ணில் மாண்டவர் தொகையை மதிப்பிடல் இயலாது; பல பேரூர்கள் போர்க்களங்களாயின; வெற்றி தோல்வி காணாவகையில் வீரர்கள் வெஞ்சமர் புரிந்தார்கள். இறுதியில், கோலார் மாவட்டத்தில் உள்ள நங்கிலி நகர்க்கு அணித்தாக நிகழ்ந்த போரில் குலோத்துங்கன் வெற்றி கொண்டான்; ஆங்குத் தோற்ற விக்கிரமாதித்தன் துங்கபத்திரையாற்றைக் கடந்து அக்கரையடையும்வரை அவனை விடாது துரத்திச் சென்றான் சோணாட்டுக்